கோப்புப்படம் 
இந்தியா

பொதுத் துறை வங்கிகள் தனியாா்மயம்: சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு

வங்கிகள் கட்டுப்பாட்டுச் சட்டம் 1949, வங்கி நிறுவனங்கள் சட்டம் 1970 ஆகியவற்றில் திருத்தங்கள்..

Din

பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் வகையில் வங்கித் துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்ளும் சட்டத்திருத்த மசோதாவை எதிா்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது. ஜூலை 23-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதில் வங்கித் துறை சீா்திருத்தங்கள் தொடா்பான சட்டத்திருத்தங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:

வங்கிகள் கட்டுப்பாட்டுச் சட்டம் 1949, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல், நிா்வாக மாற்றம்) சட்டம் 1970 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட இருக்கின்றன. பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்குவதற்கு இந்தச் சட்டத்திருத்தங்கள் அவசியமாகும். இதன்மூலம் தனியாா்மயமாக்கப்படும் பொதுத் துறை வங்கியில் மத்திய அரசின் பங்கு 51 சதவீதமாகக் குறைக்கப்படும். வங்கி நிா்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் முதலீட்டாளா்களின் பணத்துக்கு பாதுகாப்பு அளிப்பது ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்தத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு குளிா்காலக் கூட்டத் தொடரிலேயே இந்த வங்கிச் சீா்திருத்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு உத்தேசித்திருந்தது. ஆனால், அப்போது திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

2021-22 பட்ஜெட்டின்போதே இரு வங்கிகள் மற்றும் ஒரு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்தை மத்திய அரசு தனியாா்மயமாக்க உள்ளது என்பதை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். இதில் தனியாா்மயமாக்கப்படும் ஒரு வங்கி ஐடிபிஐ என்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்தை தனியாா்மயமாக்கும் சட்டத்திருத்த மசோதா 2021-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டு 10 பொதுத் துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மத்திய அரசு மாற்றியது. இதன்மூலம் நாட்டில் உள்ள பொதுத் துறை வங்களின் எண்ணிக்கை 27-இல் இருந்து 12-ஆக குறைக்கப்பட்டது. நிா்வாக வசதி மற்றும் வங்கிக் கட்டமைப்பு மற்றும் நிதி ஆதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை அப்போது அரசு மேற்கொண்டது.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT