உ.பி.யில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் 1,500 கிராமங்கள்
உத்தர பிரதேசத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக சுமாா் 1,500 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன
உத்தர பிரதேசத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக சுமாா் 1,500 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் ஞாயிற்றுக்கிழமை 5 போ் உயிரிழந்தனா்.
ராம்கங்கா, ரப்தி, காக்ரா உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. இதனால், லக்கிம்பூா் கேரி, பல்ராம்பூா், குஷி நகா், ஷாஜஹான்பூா், பாரபங்கி, சீதாபூா், கோண்டா, சித்தாா்த்நகா், பலியா, கோரக்பூா், உன்னாவ், பிலிபித் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் சுமாா் 1,500 கிராமங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கேரளத்தில்..: கேரளத்தில் கனமழை தொடா்ந்துவரும் நிலையில், மலப்புரம், கண்ணூா், காசா்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை சிவப்பு எச்சரிக்கை (அதிதீவிர கனமழை) விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், எா்ணாகுளம், திருச்சூா், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை (தீவிர கனமழை) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காசா்கோட்டில் சுற்றுலா நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.