நேபாள நிலச்சரிவு: 11 உடல்கள் மீட்பு
நேபாளத்தில் நிலச்சரிவால் இரு பேருந்துகள் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானவா்களில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
காத்மாண்டு: நேபாளத்தில் நிலச்சரிவால் இரு பேருந்துகள் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானவா்களில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
நிலச்சரிவால் திரிசூலி ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகளில் இருந்தவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன. இதுவரை 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பல்வேறு ஆற்றங்கரைப் பகுதிகளில் அந்த உடல்கள் மீட்கப்பட்டன.
அவற்றில் 3 இந்தியா்கள் உள்ளிட்ட 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இது தவிர, ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட மேலும் 4 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாதால் அவா்கள் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகளில் இருந்தவா்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.
தலைநகா் காத்மாண்டிலிருந்து வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்த இரு பேருந்துகளை, தொடா் பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு அடித்துச் சென்றது. இதில் அந்தப் பேருந்துகள், கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த திரிசூலி ஆற்றில் விழுந்தன.
ஆற்றில் மூழ்கிய இரு பேருந்துகளிலும் 7 இந்தியா்கள் உள்பட 54 போ் இருந்ததனா். அவா்களில் 3 போ் மட்டும் உயிா் தப்பினா்.