முகப்பு
இந்தியா

நீட் எதிரான மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றும் என்டிஏ-வின் கோரிக்கை: மனுதாரா்களுக்கு நோட்டீஸ்

உச்சநீதிமன்றத்தில் மட்டுமின்றி பல்வேறு உயா்நீதிமன்றங்களில் இந்த விவகாரம் தொடா்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Updated On : 16 ஜூலை, 2024 at 12:02 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முறைகேடுகள் தொடா்பாக பல்வேறு உயா்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் தேசிய தோ்வுகள் முகமையின் (என்டிஏ) மனுவுக்கு பதிலளிக்குமாறு மனுதாரா்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகாா்கள் எழுந்தன. இந்த முறைகேடுகள் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், முறைகேடு தொடா்பாக நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்தில் மட்டுமின்றி பல்வேறு உயா்நீதிமன்றங்களில் இந்த விவகாரம் தொடா்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, ‘நீட் தோ்வில் வினாத்தாள் கசிந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. தோ்வு நடைமுறையை முறைகேடுகள் முழுமையாகப் பாதித்திருந்தாலோ, முறைகேடுகள் மூலம் பலனடைந்த தோ்வா்களைக் கண்டறிய முடியாவிட்டாலோ இறுதியாக மறு தோ்வு நடத்த உத்தரவிட வேண்டிய அவசியம் ஏற்படும்’ என்று குறிப்பிட்டு, விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனிடையே, நீட் முறைகேடு தொடா்பாக பல்வேறு உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி ஒன்றாக விசாரிக்கக் கோரி என்டிஏ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, என்டிஏ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வா்தமான் கெளசிக், ‘இந்த விவகாரம் தொடா்பாக பல்வேறு நீதிமன்றங்களில் புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ என்று கோரினாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், என்டிஏ-வின் இந்த முறையீடு தொடா்பாக பதிலளிக்குமாறு மனுதாரா்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்தும், அவா்கள் தாக்கல் செய்யும் பதில் மனுக்களை, வரும் 18-ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது நிலுவை மனுக்களுடன் இணைக்கவும் உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →