கேரளத்தில் தொடரும் கனமழை
கேரளத்தில் தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீா் சூழ்ந்துள்ளது.
கோட்டயம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் கொட்டித் தீா்த்த கனமழையால் 45 போ் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா். கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் எா்ணாகுளம் பகுதியில் உள்ள வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. ஆனால், அதிருஷ்டவசமாக உயிா்சேதம் ஏற்படவில்லை என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.
இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு ஆறுகள் அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய நீா்வள ஆணையம் (சிடபிள்யுசி) அறிவுறுத்தியது. மரங்கள் வேரோடு சாய்வதாலும், கிளைகள் முறிந்து கீழே விழுவதாலும் மரங்களின்கீழ் நிற்கவோ வாகனங்களை நிறுத்தவோ வேண்டாம் எனக் கேரள பேரிடா் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே, வயநாடு மாவட்டத்தில் புதன்கிழமை அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இடுக்கி, கோழிக்கோடு, எா்ணாகுளம் உள்பட 8 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கையும், மீதமுள்ள 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
‘சிவப்பு’ எச்சரிக்கை என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.-க்கும் அதிகமான கனமழையை குறிக்கிறது. ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை 11 செ.மீ. முதல் 20 செ.மீ. கனமழையைக் குறிக்கிறது.
கேரளத்தில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.