தனியார் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு நூறு சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதைக் கட்டாயமாக்கும் கர்நாடக அரசின் சட்ட மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
சட்ட மசோதாவுக்கு கர்நாடக மாநில தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சட்ட மசோதா நிறைவேற்றம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்: கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை கட்டாயமாக்கும் வகையில் "கர்நாடக மாநில உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சட்ட மசோதா 2024' க்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு விகிதம்: தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களிலும் மேலாண்மை வேலைகளில் 50 சதவீதம், மேலாண்மை அல்லாத வேலைகளில் 75 சதவீதம், "சி', "டி' பிரிவு வேலைகளில் 100 சதவீதம் கன்னடர்களுக்கு வழங்க இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.
இந்த சட்டத்தின்படி பத்தாம் வகுப்பு தேர்வில் மொழிப் பாடமாக கன்னடம் படிக்காதவர்கள், கன்னடத் தேர்வைத் தனியாக எழுதித் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த சட்ட மசோதாவின் விதிகளை அமல்படுத்துவதற்கென உதவி தொழிலாளர் ஆணையர் அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்படுவார். சட்ட விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஜூலை 18) தாக்கல் செய்ய முதல்வர் சித்தராமையா திட்டமிட்டிருந்தார்.
ஆனால், இச் சட்ட மசோதாவுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள், தொழில் வர்த்தக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்ததால் அரசின் முடிவில் மாற்றம் ஏற்பட்டது.
தொழில் முனைவோர் எதிர்ப்பு: இது தொடர்பாக இன்போசிஸ் முன்னாள் தலைமை நிதி அதிகாரியும், தொழில்முனைவோருமான மோகன்தாஸ் பை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தச் சட்ட மசோதாவை அரசு கைவிட வேண்டும்.
இது பாரபட்சமானது, பிற்போக்கானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதுபோன்ற சட்ட மசோதாவைக் கொண்டுவர காங்கிரஸ் அரசு துணிந்தது வியப்பளிக்கிறது என்று கூறியுள்ளார்.
பயோகான் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கிரண் மஜும்தார் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்ப நிறுவனங்களில் திறன் வாய்ந்தவர்கள் வேலைக்குத் தேவைப்படுகிறார்கள். தொழில்நுட்பத்தில் தற்போது கர்நாடகம் முன்னணி இடத்தை வகிக்கிறது. அதைத் தக்கவைப்பதற்கு இச் சட்டம் தடையாக இருக்கக் கூடாது. திறன்சார் நபர் சேர்ப்புக்கு இந்தச் சட்ட மசோதாவில் முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அசோசம் கர்நாடக கிளையின் இணைத் தலைவர் ஆர்.கே.மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கர்நாடக அரசின் மற்றொரு தவறான நடவடிக்கை இது. உள்ளூர் இட ஒதுக்கீட்டைக் கட்டாயமாக்குவதோடு, அதைக் கண்காணிக்க ஒவ்வொரு நிறுவனத்திலும் அரசு அதிகாரியை நியமிப்பது, தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களை அச்சுறுத்தும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாஸ்காம் கண்டனம்: தேசிய மென்பொருள், சேவை நிறுவனங்களின் சங்கம் (நாஸ்காம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடக மாநிலத் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சட்ட மசோதா 2024}க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது எங்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. உள்ளூரில் திறன் படைத்த நபர்கள் வேலைக்குக் கிடைக்காவிட்டால், தொழில்நிறுவனங்கள் வேறு இடங்களுக்கு மாறவும் வாய்ப்புள்ளது.
"இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு' என்று பெங்களூரு புகழ் பெற்றிருக்கும் நிலையில், கர்நாடகத்தின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது. இந்தச் சட்ட மசோதாவின் அம்சங்கள் மிகுந்த கவலை அளிக்கின்றன.
11,000 புத்தொழில்கள் (ஸ்டார்ட் அப்ஸ்) தவிர, உலகின் முன்னணி நிறுவனங்களில் 30 சதவீதம் கர்நாடகத்தில்தான் உள்ளன. எனவே, வளர்ச்சிப் பாதையில் இருந்து தடம் புரளாமல் கர்நாடகத்தைக் காப்பாற்றுமாறு தொழில் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொள்கிறோம் என்று நாஸ்காம் கூறியுள்ளது.
"சட்ட மசோதா மறுபரிசீலனை'
வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு நூறு சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதைக் கட்டாயமாக்கும் கர்நாடக அரசின் சட்ட மசோதா குறித்து விவாதித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் கர்நாடக அரசின் முடிவில் புதன்கிழமை (ஜூலை 17) இரவு திடீர் மாற்றம் ஏற்பட்டது. இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்ட அறிக்கை:
தனியார் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான சட்ட மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த சட்டமசோதாவுக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இது குறித்து விவாதித்து, சட்ட மசோதா மறுபரிசீலனை செய்யப்படும். அடுத்து அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதம் நடத்தி முடிவு செய்வோம் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.