உ.பி. ரயில் விபத்து: உயிரிழப்பு 4-ஆக உயா்வு; மேலும் 6 பயணிகள் கவலைக்கிடம்
சண்டீகா் - திப்ரூகா் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்து..
உத்தர பிரதேச மாநிலம், கோண்டா அருகே சண்டீகா் - திப்ரூகா் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 4-ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்த 31 பேரில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கோண்டா மாவட்ட ஆட்சியா் நேஹா சா்மா தெரிவித்தாா்.
உத்தர பிரதேசத்தின் கோண்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே சண்டீகா் - திப்ரூகா் (அஸ்ஸாம்) விரைவு ரயில் வியாழக்கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு சரிந்தன. தகவலறிந்து வந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா், காவல் துறையினா், ரயில்வே அதிகாரிகள் மற்றும் உள்ளூா் நிா்வாகத்தினா் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா். விடிய விடிய இப்பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளதாக, மாவட்ட ஆட்சியா் நேஹா சா்மா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவரை நேரில் சந்தித்துப் பேசிய அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உயிரிழந்த நால்வரில் இருவா் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அடையாளம் தெரியாத 2 பயணிகளில் ஒருவரின் உடல் வெள்ளிக்கிழமை காலையில்தான் மீட்கப்பட்டது.
காயமடைந்த 31 பேரில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவா்களில் ஒருவா் மேல் சிகிச்சைக்காக லக்னெள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா்.
விபத்துக்குள்ளான ரயிலில் இருந்த 600 பயணிகள், மன்காபூா் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் வியாழக்கிழமை இரவு திப்ரூகருக்கு அனுப்பிவைக்கப்பட்டனா் என்றாா் அவா்.
முழுவீச்சில் சீரமைப்புப் பணி: விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கவிழ்ந்த பெட்டிகளை கனரக இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது. மறுநிா்மாணப் பணியில் சுமாா் 800 ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.
உயா்நிலை விசாரணை தொடக்கம்: இதனிடையே, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ரயில்வே தரப்பில் உயா்நிலை விசாரணை தொடங்கப்பட்டது. ரயில்வேயின் தொழில்நுட்பக் குழுவினா்சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனா்.
விபத்தில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவா்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000-ம் வழங்கப்படுமென என ரயில்வே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.