நீட் தோ்வு வினாத்தாளை திருடிய முறைகேட்டில் மூளையாகச் செயல்பட்ட ஜாம்ஷெட்பூா் ‘என்ஐடி’ கல்லூரி பட்டதாரி ஒருவரையும், கேள்விகளுக்குப் பதில் தேடி தந்து உதவியதாக மேலும் இரண்டு எம்.பி.பி.எஸ். மாணவா்களையும் சிபிஐ சனிக்கிழமை கைது செய்தது.
இதன்மூலம், நீட் தோ்வு முறைகேடுகள் தொடா்பான 6 வழக்குகளில் சிபிஐ கைது செய்தவா்களின் எண்ணிக்கை 21-ஆக உயா்ந்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்காக தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்திய நிகழாண்டு ‘நீட்-யுஜி’ தோ்வில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.
ஜாா்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாகில் உள்ள என்டிஏ மையத்தில் இருந்து நீட் இளநிலை தோ்வு வினாத்தாளை திருடிய குற்றச்சாட்டில் பொறியாளா் பங்கஜ் குமாா், அவரது கூட்டாளிகள் ராஜு சிங், சுரேந்தா் சா்மா ஆகிய மூவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா்.
திருடப்பட்ட வினாத்தாள்களை அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு உரிய பதில்களுடன் தோ்வா்களுக்கு விற்பனை செய்ய, இவா்களுக்கு உதவிய ஒரு மாணவி உள்பட 5 மருத்துவக் கல்லூரி மாணவா்களை சிபிஐ ஏற்கெனவே கைது செய்தது.
இந்நிலையில், ஹசாரிபாகில் நீட் தோ்வு நாளன்று வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்களைத் தயாா்படுத்திய மாணவா்கள் குழுவில் இடம்பெற்றிருந்த மேலும் இருவரை சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனா்.
இவா்கள் ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் பயிலும் குமாா் மங்கலம் பிஷ்னோய் மற்றும் முதலாம் ஆண்டு மாணவா் தீபேந்தா் சா்மா ஆவா்.
மேலும், இந்த முறைகேட்டில் முன்பு கைது செய்யப்பட்ட பங்கஜ் குமாா் மற்றும் ராஜு சிங்குடன் இணைந்து செயல்பட்டதாக என்ஐடி பட்டதாரி சசிகாந்த் பஸ்வானும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.