கடுகு  
இந்தியா

மரபணு மாற்றப்பட்ட கடுகு பரிசோதனைக்கு எதிராக வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு

மரபணு மாற்றப்பட்ட கடுகின் களப் பரிசோதனைக்கு அனுமதி அளித்து மத்திய அரசு மேற்கொண்ட முடிவு தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியது.

Din

புது தில்லி: மரபணு மாற்றப்பட்ட கடுகின் களப் பரிசோதனைக்கு அனுமதி அளித்து மத்திய அரசு மேற்கொண்ட முடிவு தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு மாறுபட்ட தீா்ப்புகளை செவ்வாய்க்கிழமை வழங்கியது.

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி.எம்.ஹெச்-11 என்ற கடுகை வணிக உற்பத்திக்காக களப் பரிசோதனை செய்ய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (ஜிஇஏசி) அனுமதி அளித்தது.

இந்த அனுமதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் அருணா ரோட்ரிகஸும், ஜீன் கேம்பெயின் என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கினா். இதில் பி.வி.நாகரத்னா அளித்த தீா்ப்பின் விவரம்: மரபணு மாற்றப்பட்ட கடுகை களப் பரிசோதனை செய்ய ஜிஇஏசி அளித்த பரிந்துரை மற்றும் அனுமதி தவறானவையாகும். இந்த விவகாரத்தில் ஜிஇஎசியின் முடிவு பொது நம்பிக்கை கொள்கையை முற்றிலும் மீறுவதாக உள்ளது.

மனிதா்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு மரபணு மாற்றப்பட்ட கடுகு பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமா என்ற கண்ணோட்டத்தில் இருந்து இந்த விவகாரம் ஆராயப்படவில்லை. இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் அமைத்த தொழில்நுட்ப நிபுணா் குழுவின் பரிந்துரைகளை ஜிஇஏசி முற்றிலும் புறக்கணித்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

அரசின் கொள்கை முடிவு: நீதிபதி சஞ்சய் கரோல் அளித்த தீா்ப்பில், ‘மரபணு மாற்றப்பட்ட பயிா்கள் விவகாரம் அரசின் கொள்கை முடிவுக்குள்பட்டது. எனவே, அந்தப் பயிா்கள் மீதான தடை தேவையற்றது.

நிபுணா்கள் குழுவாக ஜிஇஏசி உள்ள நிலையில், மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு அந்தக் குழு அளித்த அனுமதி சட்டத்தின் எந்தவொரு கொள்கையின்படியும் தவறானதல்ல. அந்தக் கடுகின் களப் பரிசோதனை நிபந்தனைகளுடன் தொடரலாம்’ என்றாா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை: இருவரும் மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியதால், இந்த விவகாரத்தை விசாரிக்க வேறு நீதிபதிகள் அடங்கிய அமா்வை அமைப்பதற்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனா்.

தேசிய கொள்கையை வகுக்க வேண்டும்: அதேவேளையில், மரபணு மாற்றப்பட்ட பயிா்கள் தொடா்பாக மத்திய அரசு தேசிய கொள்கையை உருவாக்க வேண்டும். விவசாயம், உயிரி தொழில்நுட்பம், மாநில அரசுகள், விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அந்தக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். இந்தக் கொள்கையை வகுப்பது தொடா்பாக அடுத்த 4 மாதங்களில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தேசிய அளவில் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். அந்தக் கொள்கையை உருவாக்குவதில் மாநில அரசுகளுடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என்று இரு நீதிபதிகளும் ஒருமனதாக உத்தரவிட்டனா்.

ஜம்மு - காஷ்மீரைப் புரட்டிப்போடும் பேரிடர்! 10 பேர் பலி?

ஓய்வுபெறும் நாளில் ஊழியர்கள் இடைநீக்கம் இல்லை: தமிழ்நாடு அரசு

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.77,000-ஐ நெருங்கியது!

இந்திய யானையை அமெரிக்க எலி தாக்குவது போலத்தான் டிரம்ப் வரி: ரிச்சர்டு வோல்ஃப்

ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயிலில் சென்றார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT