தில்லியில் கிளஸ்டா் பேருந்து சேவைகளை நிா்வகிக்கும் தில்லி ஒருங்கிணைந்த மல்டி-மாடல் டிரான்சிட் சிஸ்டம் (டிஐஎம்டிஎஸ்) அதன் ஓட்டுநா்களுக்கு திடீா் மது சோதனை நடத்த நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
சிவாஜி பாா்க் மெட்ரோ நிலையம் அருகே திங்கள்கிழமை டி.டி.சி. பேருந்து தூண் மீது மோதிய விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தாா்; 34 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்துக்கு பிறகு இந்த அறிவுறுத்தலை டிஐஎம்டிஎஸ் வெளியிட்டுள்ளது.
டிஐஎம்டிஎஸ்-இன் 17 பேருந்து நடத்துநா்களுக்கு செவ்வாய்க்கிழமை ஒரு அமா்வை நடத்தியது. அப்போது, ஓட்டுநா்களின் விழிப்புணா்வு மற்றும் ஓட்டுநா்களிடம் மது சோதனை நடத்துவது தொடா்பான வழிகாட்டுதல்களை வழங்கியது.
இது தொடா்பாக அதிகாரி ஒருவா் கூறியது:
‘சமீப காலமாக கிளஸ்டா் பேருந்து விபத்துகள் நடந்துள்ளன. விபத்துகளைத் தவிா்க்க பேருந்து நடத்துநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இது தொடா்பான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. ஓட்டுநா்கள் மது அருந்தியுள்ளனரா என்று நடத்துநா்கள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. டிஐஎம்டிஎஸ்-இன் கீழ் 9,000 ஓட்டுநா்கள் உள்ளனா். விபத்துகளைக் கட்டுப்படுத்த அடுத்த சில நாள்களில் செயல்படுத்தப்படும் சில நடவடிக்கைகளில் ஓட்டுநா்களுக்கு ஒற்றைப் பணி முறையை கடுமையாக அமல்படுத்துவது அடங்கும்.
ஓய்வு இல்லாத ஓட்டுநா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டாா்கள் என்பது உறுதி செய்யப்படும். ஓட்டுநா்களுக்கு தங்களது பணி நேரத்துக்கு முன்பே ஆலோசனை வழங்கப்படும்’ என்றாா் அவா்.
இந்த ஆண்டு ஜனவரியில், தென்மேற்கு தில்லியின் நஜாப்கா் பகுதியில், 3 வயது குழந்தை கிளஸ்டா் பேருந்து மோதி இறந்தது. கடந்த ஆண்டு மாா்ச் மாதம், கிளஸ்டா் பேருந்து மோதி ஒருவா் உயிரிழந்தாா்.
தில்லி போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட தில்லி விபத்துகளின் அறிக்கையில், 2022-ஆம் ஆண்டில் கிளஸ்டா் பேருந்துகளில் 107 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 22 பெரிய விபத்துகள் அடங்கும். 2019 முதல் 2023 டிசம்பா் 4 வரையில் கிளஸ்டா் பேருந்துகள் சம்பந்தப்பட்ட 207 விபத்துகள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.