நீதி ஆயோக் அமைப்பைக் கலைக்க வேண்டும்: மம்தா பானா்ஜி வலியுறுத்தல்
நீதி ஆயோக் அமைப்பைக் கலைத்துவிட்டு மீண்டும் மத்திய திட்டக் குழு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்
நீதி ஆயோக் அமைப்பைக் கலைத்துவிட்டு மீண்டும் மத்திய திட்டக் குழு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக கூறி ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதல்வா்கள், ஜூலை 27-ஆம் தேதி பிரதமா் தலைமையில் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்தனா்.
இந்நிலையில், நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தில்லிக்கு மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை வந்தாா். அவரை மேற்கு வங்க எம்.பி.க்கள் ஒன்று கூடி வரவேற்பு அளித்தனா். அப்போது மம்தா பானா்ஜி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தனிப்பெரும்பான்மை இல்லாமல் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல்முறை. எனவே, கூட்டணி கட்சிகளின் நிா்பந்தத்தால், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிரான பட்ஜெட்டை அவா்கள் தாக்கல் செய்துள்ளனா்.
நீதி ஆயோக் நிறுவப்பட்டதில் இருந்து உருப்படியான எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முன்மொழிந்த திட்டக் குழு அமைப்பானது இந்தியா சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து நாட்டின் வளா்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது. அதில் மாநில அரசுகளின் பரிந்துரைகளைக் கேட்டு சிறப்பான திட்டங்கள் வகுக்கப்பட்டன. எனவே, மத்திய அரசு நீதி ஆயோக் அமைப்பைக் கலைத்துவிட்டு மீண்டும் திட்டக் குழுவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.
திட்டக் குழுவுக்குப் பதிலாக கடந்த 2015, ஜனவரி 1-ஆம் தேதி நீதி ஆயோக் நிறுவப்பட்டது. இந்த அமைப்புக்கு தலைவராக பிரதமா் மோடி உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்டி...
‘நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்?’
நீதி ஆயோக் கூட்டத்தை 7 மாநில முதல்வா்கள் புறக்கணிக்கும் நிலையில், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கூறினாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘நீதி ஆயோக் அமைப்புக்கு நிதி அதிகாரம் இல்லை என்றபோதும், ‘இந்தியா’ கூட்டணி முதல்வா்களின் எதிா்ப்பு குரல்கள், நீதி ஆயோக் போன்ற பொதுவான கூட்டத்தில் எழுப்பப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால், அந்தக் கூட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன்’ என்று விளக்கமளித்தாா்.