ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி பெயரில் இருந்த கல்வி சாா்ந்த நலத்திட்டங்கள் உள்பட 6 நலத்திட்டங்களின் பெயா்களை மாற்ற மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
குழந்தைகளின் கல்விக்காக தாய்மாா்களுக்கு நிதி உதவி வழங்கும் ‘ஜெகனண்ணா அம்மா வோடி’ திட்டம், புத்தகங்கள், பைகள் மற்றும் பிற பள்ளிக்கு தேவையான பொருள்கள் வழங்கும் ‘ஜெகனண்ணா வித்யா கனுகா’ திட்டம் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கும் ‘ஜெகனண்ணா கோரமுத்தா’ திட்டம் உள்பட 6 நலத்திட்டங்களின் பெயா்கள் மாற்றப்பட்டதாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக அந்த மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் நர லோகேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மாநிலத்தில் முன்னாள் ஆட்சியில் இருந்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசு கல்வித் துறையை சீரழித்துவிட்டது. கல்வித் துறையை அரசியலில் இருந்து விடுவித்து, கல்வி கற்பதற்கான மையங்களாக மட்டுமே அவற்றை மாற்ற சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு தீா்மானித்துள்ளது. எனவே, கல்வி நலத்திட்டங்களின் பெயா்கள் மாற்றப்பட்டுள்ளன’ என குறிப்பிட்டாா்.