நிலச்சரிவால் பாதித்த வயநாட்டுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியும் நாளை(ஆகஸ்ட் 1) காலை பயணம் மேற்கொள்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரளத்தின் பருவமழையால் ஏற்பட்ட கனமழையால், வயநாட்டில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது வரை 175ஐ கடந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ராணுவம் மீட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர்.
நிலச்சரிவால் கேரளத்தின் பல மாவட்டங்கள் நிலைகுலைந்துள்ளது. தொடர் கனமழை காரணமாகவும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரும், ராணுவமும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையும் தற்போது மீட்புப் பணியில் இணைந்துள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை கிராமத்தில் இருந்த 500 வீடுகளில், இப்போது 50 வீடுகள்கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது. அந்த பகுதிகளில் 34 முதல் 49 வீடுகள் மட்டுமே இப்போது இருப்பதாகவும், வயநாடு வரைபடத்தில் இருந்து முண்டக்கை கிராமமே அழிந்துவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களைக் காண காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இன்று வயநாடு பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக வயநாடு பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நாளை ராகுல், பிரியங்கா காந்தி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளை காலை 9.30 மணிக்கு கண்ணூர் சென்று அங்கிருந்து கார் மூலம் வயநாடு செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.