வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், முண்டைக்கை உள்ளிட்ட சில ஊர்களில், அனைத்தும், மண்ணால் மூடப்பட்டு, அழகிய பகுதிகள் அனைத்தும் இன்று படுபயங்கர போர்க்களம் போல மாறிநிற்கிறது.
மிக மோசமாக நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கையில, சில கிலோ மீட்டர் வரை மக்கள் வாழ்ந்த தடயமே இல்லாமல் ஒரு ஊரையே காணவில்லை என்று மக்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.
மீட்புப் பணிகளின்போது, கழுகுப் பார்வையில்தான், எறுவழிஞ்சி ஆற்றின் பாதையே மாறி, ஒரு கிராமத்துக்கு நடுவில் எப்போதும் ஓடிக்கொண்டிருப்பாதைப்போல சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு சில நாள்களுக்கு முன்பு அங்கு ஒரு கிராமம் இருந்தது என்பதற்கான எந்த மிச்சத்தையும் அந்த ஆறு விட்டுவைத்திருக்கவில்லை.
முண்டைக்கையில் மீட்புப் பணிகளின்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஒன்பது பேர் உயிரிழந்துவிட்டனர் என்ற செய்தி அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரே வீட்டில் 11 பேர் வசித்து வந்த நிலையில், தேனியைச் சேர்ந்த ஒரு குடும்பம், கேரள மாநிலம் வயநாட்டில் வாழ்ந்து வந்த நிலையில், 9 பேர் நிலச்சரிவில் பலியாகியிருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை வரை பல சந்தோஷங்களையும் துக்கங்களையும் பார்த்த வீடுகள் இன்று பேய் வீடுகளைப் போல பார்ப்பவர்களை நடுங்க வைக்கும் வகையில், ஆற்றின் நிலச்சரிவில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், மெப்பாடி பஞ்சாயத்துதான், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரே ஒரு நாள் இரவில் ஒட்டுமொத்த கிராமமும் தலைகீழாகிவிட்டது. ஆம் வீடுகளுக்குக் கீழ் இருந்த மண், வீடுகளை புரட்டிப்போட்டுவிட்டு மேலே வந்துவிட்டது.
முண்டக்கையிலிருந்து நிலச்சரிவு தொடங்கி, சேரும், மரக் கிளைகளும், நடுவழியில் நின்றிருந்த வீடுகளின் இடிபாடுகளையும் கொண்டுவந்து சூரல்மலாவில் சேர்த்துவிட்டது, இந்த வேலையின்போது, எறுவழஞ்சி ஆற்றின் போக்கே மாறிவிட்டிருக்கிறது. ஆற்றங்கரையோரம் இருந்த கிராமங்கள் என்ற நிலையை மாற்றி, கிராமத்துக்குள் ஒரு ஆறு என்பதுபோல மாறிநிற்கிறது.
தனது புதிய பாதையில் இருந்த அனைத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டிருக்கிறது எறுவழஞ்சி. இந்த கிராமத்தில்தான் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் விடுதிகள் அமைந்திருந்தன. இங்கிருந்த அரசு உயர்நிலைப் பள்ளியையும் பாதி காணவில்லை.
இங்கிருந்த 24 குழந்தைகள் காணாமல் போனதாக, பள்ளி தலைமையாசிரியர் தெரவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.