புது தில்லி: உனது சகோதரியாக இருப்பதில் பெருமைகொள்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு சகோதரி பிரியங்கா கடிதம் எழுதியிருக்கிறார்.
மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி மற்றும் ஒட்டுமொத்தமாக இந்தியா கூட்டணி வெற்றிக்கு மிக உருக்கமான கடிதம் ஒன்றை ராகுலுக்கு பிரியங்கா எழுதியிருக்கிறார்.
அதில், மிகைப்படுத்தப்பட்ட பொய்களுக்கு எதிரான போராட்டம் என்றும், உண்மைக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
எதற்கும் துணிந்தவர் என்று ராகுலை புகழ்ந்திருக்கும் பிரியங்கா, தனது இதயத்தில் அன்பு, உண்மை, கனிவுடன் அவர் போராடியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், எப்போதும் போலவே நீ தைரியமாக இரு, மற்றவர்கள் என்ன சொன்னாலும், நீ இப்போது செய்வதையே தொடர வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் பின்வாங்கக் கூடாது, உண்மைக்கான போராட்டத்தை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. மிகைப்படுத்தப்பட்ட பொய்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடக்கூடாது. உன்னை கோபமும், விரக்தியும் ஆட்கொள்ள அனுமதிக்கக் கூடாது, ஒருவேளை பலரும் இதனையே உனக்கு பரிசாகக் கொடுத்தாலும் கூட, இதுவரை பார்க்காதவர்களும் உன்னை இனி பார்ப்பார்கள், நீ எதற்கும் துணிந்த வீரர் என்று பிரியங்கா தனது சகோதரர் ராகுலை புகழ்ந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி, கேரள மாநிலம் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றாா்.
ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ராகுல் காந்தி, 6,87,649 வாக்குகளைப் பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் தினேஷ் பிரதாப் சிங் 2,97,619 வாக்குகளைப் பெற்றாா். இதன் மூலம், அந்தத் தொகுதியில் 3.90 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி அபார வெற்றி பெற்றாா்.
இதேபோல வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, 6,47,445 வாக்குகளைப் பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், அக்கட்சிப் பொதுச் செயலா் டி.ராஜாவின் மனைவியுமான ஆனி ராஜா 2,83,023 வாக்குகளை மட்டுமே பெற்றாா். இதன் மூலம், வயநாட்டிலும் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி அபார வெற்றியடைந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.