பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) புதிய எம்.பி.க்கள் கூட்டம் தில்லியில் இன்று (ஜூன் 7) நடைபெற்று வருகிறது.
பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிகார் முதல்வருமான நிதிஷ் குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதீஷ்குமார் பேசுகையில், அடுத்த முறையும் எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காது, அவர்கள் நாட்டிற்காக எதையும் செய்யவில்லை.
பிகாரில் நிலுவைவில் உள்ள அனைத்துப் பணிகளும் செய்து முடிக்கப்படும். நாங்கள் அனைவரும் பிரதமருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பிரதமராக பதவியேற்கவுள்ளீர்கள், ஆனால் நீங்கள் அதை இன்றே செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்.
மோடியின் ஆட்சியை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.