நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியும், அவருடன் 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற நிகழ்ச்சியின்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறுத்தை போன்ற ஒரு விலங்கு நடமாடியதாகக் கூறப்படும் விடியோ வைராலாகி வருகிறது.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா ஞாயிற்றுக்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகையில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அவருடன் 72 பேர் மத்திய அமைச்சர்களாகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
பிரதமா் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமா் புஷ்ப கமல் தாஹால், மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜகநாத், பூடான் பிரதமா் ஷெரிங் தோப்கே, மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், செஷல்ஸ் துணை அதிபா் அகமது அதிஃப் ஆகிய 7 அண்டை நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.
அரசியல் பிரமுகா்கள், திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி தூய்மைப் பணியாளா்கள், புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள், திருநங்கைகள் என பல்வேறு தரப்பைச் சோ்ந்த சுமாா் 9,000 போ் பங்கேற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் அழையா விருந்தாளியாக ஒரு விலங்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் சுற்றி வரும் விடியோ வெளியாகியிருக்கிறது. மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டிருந்தபோது, அதன் பின்னணியில் ஒரு விலங்கு நடமாடிக்கொண்டிருந்தது. பலரின் கண்களிலிருந்து தப்பவில்லை.
மேடையில், புதிதாக பதவியேற்றுக் கொண்ட எம்.பி.க்கள் கையெழுத்திடும் நிகழ்வு நடந்துகொண்டிருந்த அதே வேளையில், ஒரு சிறுத்தை போன்ற விலங்கு, குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்துக்குள் அங்குமிங்குமாக உலாவிக்கொண்டிருந்தது. குறிப்பாக, பாஜக எம்.பி. துர்கா தாஸ் கையெழுத்திட்டுக்கொண்டிருக்கும்போது அந்த விலங்கு தெளிவாக விடியோவில் பதிவாகியிருக்கிறது.
அது என்ன சிறுத்தையா? இல்லை சாதாரண பூனைதானா? இல்லை நாயாக இருக்குமா? என விடியோவை பார்த்த பலரும் தங்களது கேள்விகளை எழுப்பிவருகிறார்கள்.
ஒருவேளை அது பூனையாக இருந்தால் பிரச்னையில்லை, சிறுத்தையாக இருந்தால்? அங்கே பாதுகாப்புப் பணியில் ஏராளமான வீரர்கள் இருந்தபோது, பூனையோ, நாயோ, இப்படி ஒருநிகழ்ச்சியின் பின்னணியில் உலாவிக்கொண்டிருந்தது எப்படி என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
தில்லி குடியரசுத் தலைவா் மாளிகை முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணியளவில் தொடங்கிய பிரம்மாண்ட விழாவில், பிரதமராக நரேந்திர மோடிக்கும், அதைத் தொடா்ந்து மற்ற அமைச்சா்களுக்கும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.