குஜராத்தின் பஞ்சமகால் மாவட்டத்தின் பவகாத் மலையிலுள்ள காளிகா மாதா கோவில் படிக்கட்டுகளில் இருந்த சமணத் துறவிகளின் சிலைகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அதனை மீண்டும் அதே இடத்தில் வைக்க குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோவிலை புதுப்பிக்கும் திட்டத்தில் படிக்கட்டுகளின் அருகிலிருந்த பழையக் கொட்டகையை அகற்றும்போது சிலைகள் இடம்பெயர்ந்திருக்கலாம் என்று அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயின் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் மீண்டும் சிலை இருந்த இடத்திலேயே வைக்கப்பட்டது.
தீர்த்தங்கரர்கள் எனப்படும் சமணத் துறவிகளின் சிலைகள் கோவிலின் அதிகம் பயன்படுத்தப்படாதப் பாதையிலுள்ள படிக்கட்டுகளின் இருபுறமும் இருந்துள்ளன. நேற்று (ஜூன் 17) ஜெயின் சமூகத்தினர் சிலர் அங்கிருந்த 7 சிலைகள் இல்லாததைக் கண்டுள்ளனர். பின்னர், அந்த சிலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு வேறொரு இடத்தில் ஒன்றாக வைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. எனவே, ஜெயின் சமூகத்தினர் இணைந்து வதோதரா, ஹலோல், சூரத் பகுதியில் போராட்டம் நடத்தி சிலைகளை இருந்த இடத்திலேயே வைக்குமாறு அங்குள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் மனுக்களைக் கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குஜராத்தின் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த விவகாரத்தில் தலையிட்டு, முதல்வர் பூபேந்திர படேலிடம் கலந்தாலோசித்து சிலைகளை இருந்த இடத்திலேயே மீண்டும் வைக்க கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.
ஜெயின் சமூகத் தலைவரான கிரண் துக்காட் என்பவர் காவல்துறையில் அளித்த மனுவில், காளிகா மாதாஜி கோவிலின் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் சமணர்களின் சிலைகளை அப்புறப்படுத்தியுள்ளனர். எங்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதால் அவர்களின் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் கோவில் நிர்வாக குழுவைச் சேர்ந்த வினோத் வாரியா கூறுகையில், “நாங்கள் எந்த மதக் கட்டுமானங்களையும் இழிவுபடுத்தவில்லை. கோவில் பராமரிப்புப் பணிகளின் போது இடம்பெயர்த்து வைக்கப்பட்ட சிலைகளை மீண்டும் அதே இடத்தில் வைத்து விடுகிறோம்” என்று ஜெயின் சமூகத்தினரிடம் தெரிவித்துக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.