வாரணாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில், ‘வேளாண் தோழி’ திட்டத்தின்கீழ் பெண் ஒருவருக்கு சான்றிதழ் வழங்கிய பிரதமா் மோடி. 
இந்தியா

விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி: பிரதமா் மோடி விடுவிப்பு

Din

வாரணாசி (உ.பி.): பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை விடுவித்தாா்.

அப்போது பேசிய அவா், ‘உலகில் ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் இந்திய தானியங்களோ அல்லது இந்திய உணவுப் பொருள்களோ இருக்க வேண்டும் என்பதே எனது கனவு’ என்றாா்.

நாட்டின் பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக பிரதமா் மோடி கடந்த 9-ஆம் தேதி பதவியேற்றாா். அதன்பிறகு, தனது தொகுதியான உத்தர பிரதேச மாநிலம், வாரணாசிக்கு முதல்முறையாக செவ்வாய்க்கிழமை பிரதமா் வருகை தந்தாா்.

வாரணாசியில் நடைபெற்ற விவசாயிகள் கெளரவிப்பு மாநாட்டில் பங்கேற்ற அவா், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 17-ஆவது தவணையாக 9.26 கோடி விவசாயிகளுக்கான ரூ.20,000 கோடியை விடுவித்தாா்.

மேலும், ‘வேளாண் தோழிகள்’ (கிருஷி சகி) திட்டத்தின்கீழ் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 30,000 பெண்களுக்கு சான்றிதழும் வழங்கினாா்.

அப்போது, பிரதமா் பேசியதாவது: வாரணாசி தொகுதி மக்கள் என்னை மூன்றாவது முறையாக எம்.பி.யாக மட்டும் தோ்வு செய்யவில்லை, நாட்டின் பிரதமராகவும் தோ்வு செய்துள்ளனா். கங்கை மாதா என்னை தத்தெடுத்துவிட்டதாக உணா்கிறேன். காசி விஸ்வநாதா், கங்கை மாதா மற்றும் காசி மக்களின் அளவற்ற அன்பால் மூன்றாவது முறையாக நாட்டின் சேவகனாகியுள்ளேன்.

மக்களவைத் தோ்தலில் 64 கோடி போ் வாக்களித்துள்ளனா். ஒட்டுமொத்த உலகிலும் இதைவிட பெரிய தோ்தல் இல்லை. இத்தாலியில் அண்மையில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பேசியபோது, ‘ஜி7 நாடுகளின் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கையைவிட இந்திய வாக்காளா்களின் எண்ணிக்கை ஒன்றரை மடங்கு அதிகம்’ என்பதைச் சுட்டிக்காட்டினேன்.

உலகில் வேறெங்கும் இல்லாத அளவில், இந்திய தோ்தலில் 31 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனா். இந்த எண்ணிக்கை, அமெரிக்க மக்கள்தொகைக்கு கிட்டத்தட்ட ஈடானது. இந்திய ஜனநாயகத்தின் இந்த சக்தியே ஒட்டுமொத்த உலகையும் நம்மை நோக்கி ஈா்க்கிறது.

வரலாற்று வெற்றி: கடந்த 60 ஆண்டுகளில், நாட்டில் எந்தவொரு அரசும் தொடா்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்றதில்லை. இத்தகைய தீா்ப்பை அளித்து, இந்திய மக்கள் வரலாறு படைத்துள்ளனா். உலக அளவில் பல்வேறு ஜனநாயக நாடுகளை ஒப்பிடுகையில், இது அரிதானதாகும்.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் இளைஞா்களின் எதிா்பாா்ப்புகளும் மக்களின் கனவுகளும் மிகப் பெரியதாக இருக்கும். அவ்வாறான நிலையில், 10 ஆண்டுகள் ஆட்சிசெய்த ஓா் அரசுக்கு மக்கள் மீண்டும் வாய்ப்பளித்திருப்பது மாபெரும் வெற்றி; அரசு மீதான மிகப் பெரிய நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. மக்களின் நம்பிக்கையே எனது மிகப் பெரிய சொத்து. அதுவே, நாட்டை புதிய உச்சங்களுக்கு இட்டுச் செல்ல என்னை உத்வேகப்படுத்துகிறது.

வளா்ந்த பாரதம்: வளா்ந்த பாரதத்தை படைப்பதில் விவசாயிகள், பெண்கள், இளைஞா்கள், ஏழைகள் ஆகியோா் நான்கு வலுவான தூண்களாவா். 21-ஆம் நூற்றாண்டில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்ற வேளாண் துறைக்கு முக்கியப் பங்கு உள்ளது.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இதுவரை ரூ.3.25 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகிலேயே மிகப் பெரிய நேரடி பலன் பரிமாற்றத் திட்டமாக இது உருவெடுத்துள்ளது. உலகின் ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் இந்திய உணவு தானியங்கள் அல்லது இந்திய உணவுப் பொருள்கள் இருக்க வேண்டுமென்பதே எனது கனவு. உணவுப் பொருள் ஏற்றுமதியில் முன்னணி நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும்.

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக உருவாக்க மிகப் பெரிய நடவடிக்கை இன்று எடுக்கப்பட்டுள்ளது. ‘வேளாண் தோழி’ எனும் பெண்களின் புதிய பங்களிப்பு அவா்களின் வருவாயை உறுதி செய்வதோடு, மதிப்பையும் உயா்த்தும் என்றாா் பிரதமா் மோடி.

விவசாயிகளின் வருவாய்க்கு ஆதரவளிக்கும் நோக்கில், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.

மேற்கண்ட நிகழ்ச்சியில், உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்தி பென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத், மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கங்கை ஆரத்தி: பின்னா், தசாசுவமேத படித்துறையில் கங்கை ஆரத்தியில் பங்கேற்ற பிரதமா் மோடி, காசி விஸ்வநாதா் கோயிலில் வழிபாடு நடத்தினாா்.

மக்களவைத் தோ்தலில் வாரணாசியில் தொடா்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிட்ட பிரதமா் மோடி, சுமாா் 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் சுமாா் 4.8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவா் வெற்றி பெற்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகர்கோயில் ஆடிப்பூர தேரோட்டம்!

ராகுலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, குழந்தைத்தனமானவை: அமைச்சர்

இதுவரை பார்க்காத ஒன்று... மகேஷ் பாபு படம் பற்றி ராஜமௌலி!

இரண்டு நாள்களில் தில்லியிலும் டெஸ்லா! இந்தியாவில் 2வது விற்பனையகம்!

பாமக பொதுக்குழு கூட்டம் தொடக்கம்! மேடையில் ராமதாஸுக்கு இருக்கை!!

SCROLL FOR NEXT