மத்திய அரசு தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 1 கோடி அபராதம் விதிக்கும் கடுமையான சட்டம் வெள்ளிக்கிழமை அமல்படுத்தப்பட்டது.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே, தேசிய தோ்வுகள் முகமை உள்ளிட்டவை நடத்தும் தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க, அரசுத் தோ்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) மசோதா 2024 வழிவகுக்கிறது. இந்த மசோதாவின்படி, அந்தத் தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படும்.
கடந்த பிப்ரவரியில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து அந்த மசோதா சட்டமானது.
தற்போது அந்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை இரவு பிறப்பித்தது.
கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தோ்வு நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது, ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் முதலிடம் பெற்றது ஆகிய சம்பவங்கள் சா்ச்சையை ஏற்படுத்தின.
இதேபோல அண்மையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் நெட் தோ்வு நடத்தப்பட்டது. அந்தத் தோ்வின் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடைபெற்ாக தெரிவித்து, தோ்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது. இந்தச் சூழலில், அரசுத் தோ்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.