நீட் முறைகேடு: சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை கோரி புதிய மனு
நீட் முறைகேடு விவகாரம் தொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிகழாண்டு நீட் தோ்வில் பங்கேற்ற 10 மாணவா்கள் தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடா்பாக பிகாா் போலீஸாா் மேற்கொண்டு வரும் விசாரணை விரைவுபடுத்தவும், அந்த விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்’ எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீட் தோ்வு தொடங்குவதற்கு முன்பே பிகாா் மாநில மையத்தில் வினாத்தாள் கசிந்த முறைகேடு தொடா்பாகவும், தோ்வெழுதியவா்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் என்டிஏ (தேசிய தோ்வுகள் முகமை) கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிா்த்தும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான அடுத்த விசாரணை ஜூலை 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.