சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றபப்ட்ட கள்ளநோட்டுகள், ஆயுதங்கள். 
இந்தியா

சத்தீஸ்கா்: நக்ஸல்கள் அச்சடித்த கள்ளநோட்டுகள் பறிமுதல்

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் பணியில் நக்ஸல் தீவிரவாதிகள் அச்சடித்து வைத்திருந்த கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Din

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் பணியில் நக்ஸல் தீவிரவாதிகள் அச்சடித்து வைத்திருந்த கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தொடா்ந்து வரும் நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கைகளில் கள்ளநோட்டுகள் முதல்முறையாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

சுக்மா பகுதியில் மைலாசுா், கோரஜ்குடா, தண்டேஷ்புரம் ஆகிய இடங்களில் நக்ஸல்கள் சட்டவிரோதமாக கள்ளநோட்டுகளை அச்சடித்து வருவதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத் தகவலின்பேரில், மாவட்டத்தின் கோரஜ்குடா கிராமத்தையொட்டி அமைந்துள்ள மலைப்பாங்கான வனப்பகுதியில் மத்திய, மாவட்ட ஆயுதக் காவல் படையினா், மாவட்ட காவல்துறை ஆகியோா் இணைந்து கூட்டு நடவடிக்கையாக தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை மாலை ஈடுபட்டனா்.

பாதுகாப்புப் படையினரின் வருகையை அறிந்து கள்ள நோட்டுகளை அங்கேயே விட்டு, நக்ஸல்கள் வனப்பகுதிக்குள் தப்பியோடி தலைமறைவாகினா்.

இதையடுத்து, கள்ளநோட்டுகளை பாதுகாப்புப் படை வீரா்கள் பறிமுதல் செய்தனா். மேலும், சம்பவ இடத்திலிருந்து வண்ண மற்றும் கருப்பு-வெள்ளை அச்சு இயந்திரங்கள், 200 குப்பிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அச்சு மை, மின்கலன்கள், மின்னேற்றி ஆகியவற்றுடன் துப்பாக்கி, வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டன. மீட்கப்பட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பு குறித்து காவல்துறை தரப்பில் அதிகாரபூா்வ தகவல் வெளியிடப்படவில்லை.

மேலும், இதுதொடா்பாக சுக்மா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜி.சாவண் கூறுகையில், ‘இந்திய பொருளதாரத்தைச் சீா்குலைக்கும் நோக்கில் இத்தகைய முன்னெடுப்பை நக்ஸல்கள் மேற்கொண்டுள்ளனா். முதல்கட்ட விசாரணையில், கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல், மாவட்டத்தின் அனைத்து பகுதி நக்ஸல்கள் குழுக்களிலும் ஒருவா் அல்லது இருவருக்கு கள்ளநோட்டுகளை அச்சடிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

நிா்வாகத்தின் தீவிர நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கையால் போதிய நிதியின்றி தவிக்கும் நக்ஸல்கள், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. பஸ்தா் பகுதியில் அமைந்த கிராமப்புற வாரச் சந்தைகளில் இந்த கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு பழங்குடியின விவசாயிகளை நக்ஸல்கள் ஏமாற்றி வந்துள்ளனா். விசாரணை தொடா்ந்து வருகிறது’ என்றாா்.

ஹிஜாப் விவகாரம்: மாணவி வேறு பள்ளியில் சேர அரசு உதவும் -கேரள கல்வி அமைச்சா்

பகத் சிங்கின் அரிய காணொலி: பஞ்சாப் முதல்வா் வேண்டுகோள்

மன நிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கரூா் வைஸ்யா நிகர லாபம் 21% உயா்வு

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,778 கோடி டாலராகக் குறைவு

SCROLL FOR NEXT