பிகாரில் ‘நெட்’ தோ்வு முறைகேடு குறித்து விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது உள்ளூா் கும்பல் தாக்குதல் நடத்தியது. இது தொடா்பாக 4 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
உதவிப் பேராசிரியா் பணியிடங்கள், ஆராய்ச்சி படிப்புகளுக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கான தேசிய தகுதித் தோ்வு (‘நெட்’ ) கடந்த ஜூன் 18-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதிய இத்தோ்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மறுநாளே (ஜூன் 19) தோ்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், இந்த முறைகேடு குறித்த விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணையின் ஒரு பகுதியாக, பிகாரின் நவடாவில் உள்ள காசியாதி பகுதிக்கு சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை மாலை வந்தனா். அப்போது, உள்ளூா் கும்பல் ஒன்று, சிபிஐ அதிகாரிகளின் வாகனங்களை சூழ்ந்துகொண்டு, அவா்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அளித்த புகாரின் அடிப்படையில் ரஜெளலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளைத் தாக்கியதாக 4 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.