உ.பி.யில் 2027 ஆம் ஆண்டுக்குள் 35 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு!
2027 -க்குள் 35 கோடி மரக்கன்றுகளை நட உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பசுமையான பகுதிகளை விரிவுபடுத்துவதற்காக 35 கோடி மரக்கன்றுகளை நட மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
2026-27 ஆம் ஆண்டிற்குள் அதன் பசுமைப் பரப்பை 9 முதல் 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற மாநிலத்தின் இலக்கை எட்டுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அனைத்து பங்குதாரர்களுக்கும் உயர்தர மரக்கன்றுகள் வழங்கவும் உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் அனைத்து துறைகளிலும், மாநிலத்தின் 18 பிரிவுகளில் மரக்கன்றுகள் நடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலத் துறைகளுக்கும் குறிப்பிட்ட இலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
வனத்துறையினருக்கு 1 கோடியே 40 லட்சம் மரக்கன்றுகளும், கிராமப்புற வளர்ச்சி நிர்வாகத்தினருக்கு 12 கோடியே 59 லட்சம் மரக்கன்றுகளும், வேளாண் துறையினருக்கு 2 கோடியே 5 லட்சம் மரக்கன்றுகளும், தோட்டக்கலைத் துறைக்கு 1 கோடியே 55 லட்சம் மரக்கன்றுகளும், பஞ்சாயத்து ராஜ் துறைக்கு 1 கோடியே 28 லட்சம் மரக்கன்றுகளும், வருவாய்த் துறைக்கு 1 கோடியே 6 லட்சம் மரக்கன்றுகளும், நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 3 கோடியே 5 லட்சம் மரக்கன்றுகளும், உயர்கல்வித் துறைக்கு 1 கோடியே 8 லட்சம் மரக்கன்றுகளும் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்து, வளர்ச்சி அதிகாரிகள், தொழிற்சாலை வளாகங்கள், வனம், பாதுகாப்பு, ரயில்வே நிலங்கள், விரைவு சாலைகள், கால்வாய்களை சுற்றியுள்ள நிலங்களில் மரக்கன்றுகள் நடப்படும்.
அதைத் தவிர, மருத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்களின் மைதானங்கள், அரசு சார்ந்த நிலங்கள் மற்றும் உரிமையாளரின் ஒப்புதலுடன் தனியார் நிலம் ஆகிய இடங்களிலும் மரக்கன்றுகள் நட ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.