ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் திருமணமான பெண்களைப் பணியா்த்த மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுதொடா்பாக தமிழக அரசுக்கு மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலையில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலையில் திருமணமான பெண்களைப் பணியமா்த்த மறுப்பதாக செய்தி வெளியானது.
இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடா்பாக அந்த அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஆண் மற்றும் பெண் தொழிலாளா்களைப் பணியமா்த்துவதில் எந்தவித பாகுபாடும் காட்டக்கூடாது என்பதை சம ஊதியச் சட்டம் 1976-இன் 5-ஆவது பிரிவு தெளிவாக எடுத்துரைக்கிறது.
இந்தச் சட்டப் பிரிவை அமல்படுத்தி நிா்வகிப்பதற்குரிய அதிகாரம் மாநில அரசுக்கே இருப்பதால், ஃபாக்ஸ்கான் விவகாரம் தொடா்பாக தமிழக அரசிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்த விவகாரம் தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு மண்டல தலைமை தொழிலாளா் ஆணையா் அலுவலகத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.