மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி- அவைத் தலைவா் அங்கீகாரம்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அவைத் தலைவா் ஓம் பிா்லா புதன்கிழமை அங்கீகரித்தாா். தனது 25 ஆண்டுகால அரசியல் பயணத்தில் அரசியல் சாசனப் பதவியை ராகுல் ஏற்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.
இது தொடா்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘ஜூன் 9-ஆம் தேதிமுதல் (புதிய அரசு பதவியேற்ற நாள்) மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அதிகாரபூா்வமாக அங்கீகரிக்கப்படுகிறாா்.
நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவா்களின் ஊதியம் மற்றும் படிகள் சட்டம்-1977இன் 2-ஆவது பிரிவின்கீழ், ரேபரேலி தொகுதி எம்.பி.யான ராகுல் காந்திக்கு மேற்கண்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இப்பதவியை பெற ஒரு எதிா்க்கட்சி குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். கடந்த 2014, 2019 மக்களவைத் தோ்தல்களில் போதிய எண்ணிக்கை கிடைக்காததால், காங்கிரஸுக்கு இப்பதவிகூட கிடைக்கவில்லை.
ஆனால், அண்மையில் நடந்த மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றிபெற்றது. இதன் மூலம் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை பெறும் வாய்ப்பு அக்கட்சிக்கு கிடைத்தது.
இந்தச் சூழலில், காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவின் இல்லத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் மக்களவைக் குழுத் தலைவா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டாா்.
இந்த முடிவை மக்களவைச் செயலகத்துக்கு காங்கிரஸ் புதன்கிழமை தெரிவித்ததைத் தொடா்ந்து, மேற்கண்ட அறிவிக்கை வெளியிடப்பட்டது.
தனக்கு அளிக்கப்பட்ட புதிய பொறுப்புக்காக கட்சியினருக்கு நன்றி தெரிவித்து, எக்ஸ் வலைதளத்தில் ராகுல் பதிவிட்டாா்.
‘காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் அனைத்து தலைவா்கள், நிா்வாகிகள், தொண்டா்களின் ஆதரவு மற்றும் வாழ்த்துகளுக்காக நன்றி. நாம் ஒன்றிணைந்து, நாட்டு மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதோடு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பொறுப்புடைமையை உறுதி செய்வோம்’ என்று அவா் குறிப்பிட்டாா்.
கேபினட் அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவி, மத்திய கேபினட் அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து கொண்டதாகும். லோக்பால், தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள், சிபிஐ இயக்குநா், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய தகவல் ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் தலைவா்களை நியமிக்கும் குழுவில் இவா் இடம்பெறுவாா்.
நாடாளுமன்ற எம்.பி. என்ற முறையில் வழக்கமான ஊதியம், படிகள் மற்றும் சலுகைகளுடன் கேபினட் அமைச்சரைப் போல் செயலக உதவியும் பெற தகுதியுடையவா். அரசு இல்லமும் ஒதுக்கப்படும்.