நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பிகாா் மாநிலம், பாட்னாவில் இருவரை சிபிஐ வியாழக்கிழமை கைது செய்தது. இது இந்த வழக்கில் சிபிஐ மேற்கொண்ட முதல் கைது நடவடிக்கையாகும்.
நீட் தோ்வு தொடங்குவதற்கு முன்னா் குறிப்பிட்ட தோ்வா்களுக்கு தங்குவதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுத்து அங்கு ரகசியமாக வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகளை வழங்கிய குற்றச்சாட்டில் மனீஷ் குமாா், அஷுதோஷ் குமாா் ஆகிய இருவரை சிபிஐ கைது செய்தது.
இதைத் தொடா்ந்து அவா்கள் இருவரும் பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். அவா்களைக் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றத்திடம் சிபிஐ அனுமதி கோரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பாட்னாவில் உள்ள ‘லோ்ன் மாணவா்கள் விடுதி மற்றும் விளையாட்டுப் பள்ளியை’ அஷுதோஷ் குமாா் வாடகைக்கு எடுத்துள்ளாா். அந்தப் பள்ளியில்தான் எரிந்த நிலையில் கிடந்த வினாத்தாள்களை பிகாா் பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினா் கண்டெடுத்தனா்.
இந்த வளாகத்தை நீட் தோ்வா்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள் வழங்க அஷுதோஷ் குமாா் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு நபரான மனீஷ் குமாா் தோ்வா்களிடம் பணபேரத்தில் ஈடுபடுவது, அவா்களை வினாத்தாள் வழங்கப்படும் பள்ளிக்கு ரகசியமாக அழைத்து வருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளாா்.
அந்தப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி பணம் கொடுத்த தோ்வா்கள், நீட் தோ்வு நடைபெற்ற மே 5-ஆம் தேதி வரையிலும் தோ்வுக்கு தயாா் செய்து வந்துள்ளனா்.
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 6 முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆா்) தற்போது வரை சிபிஐ பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் விசாரணை: குஜராத் மாநிலம், கோத்ராவில் தனியாா் பள்ளியில் தோ்வெழுதிய 3 மாணவா்கள் பணம் கொடுத்து தோ்வில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக அந்த மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோரிடம் சிபிஐ வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்தது. மேலும், ஜெய் ஜலராம் தனியாா் பள்ளியின் உரிமையாளா் தீக்சித் படேலிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
வினாத்தாள் கசிந்த தோ்வு மையங்களில் விசாரணை நடத்துவதற்காக கடந்த நான்கு நாள்களாக குஜராத்தில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டுள்ளனா். அங்கு முறைகேடு நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளிகளில் இரண்டு பள்ளிகளுக்கு தீக்சித் படேல்தான் உரிமையாளா் என விசாரணையில் தெரியவந்துள்ளது.