‘நீட்’ தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக, குஜராத்தில் தனியாா் பள்ளியின் உரிமையாளரை சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இதுதொடா்பாக அரசு வழக்குரைஞா் ராகேஷ் தாக்கூா் கூறியதாவது: பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளா் தீக்சித் படேலை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். குஜராத்தில் நீட் தோ்வு முறைகேடு தொடா்பான வழக்குகளை சிபிஐக்கு மாநில அரசு மாற்றியுள்ளது. எனவே, அவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு அகமதாபாதில் உள்ள உள்ளூா் நீதிமன்றத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனா்’ என்றனா்.
குஜராத்தில் நீட் தோ்வு நடத்திய மையங்களில் ஜெய் ஜலராம் பள்ளியும் ஒன்று. நீட் தோ்வில் தோ்ச்சி பெறவைப்பதாக கூறி தோ்வா்களிடம் ரூ.10 லட்சம் பெற்றக் குற்றச்சாட்டில் தீக்சித் படேல் கைது செய்யப்பட்டுள்ளாா்.
நீட் முறைகேடு தொடா்பாக இதுவரை 6 போ் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.