சமாஜவாதி கட்சித்தலைவர் அவதேஷ் பிரசாத், மக்களவைத் துணைத் தலைவராவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 17வது மக்களவையானது துணைத் தலைவர் இல்லாமல் செயல்பட்டது. ஆனால், அரசியலமைப்பின் 93வது பிரிவின்படி, மக்களவைத் துணைத் தலைவராக ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆகையால், 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் ஜூலை 3ஆம் தேதிக்குள் மக்களவைத் துணைத் தலைவர் பதவி நியமிக்கப்பட வேண்டும்; இல்லையெனில் மக்களவைத் தலைவரிடம் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஃபைசாபாத் எம்.பி.யும் சமாஜவாதி கட்சித்தலைவருமான அவதேஷ் பிரசாத்தை மக்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு நியமிக்கலாம் என எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. காங்கிரஸ், திரிணாமுல் மற்றும் சமாஜவாதி கட்சிகள், அதாவது `இந்தியா’ கூட்டணியின் மூன்று முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மக்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ள உறுப்பினர் குறித்து ஆலோசித்துள்ளனர்.
அதன்படி, 9 முறை எம்.எல்.ஏ.வாகவும், முதல் முறையாக எம்.பி.யாகவும் இருக்கின்ற பிரசாத், ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை எம்.பி.யாக இருந்த பாஜகவின் லல்லு சிங்கை தோற்கடித்தார். இந்த நிலையில், பட்டியலின சமூகப் பிரிவைச் சேர்ந்த அவதேஷ் பிரசாத் மக்களவைத் துணைத் தலைவராக தேர்வாக உள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.