காஸாவில் உடனடி மனிதநேய உதவிகள்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் உடனடியாக மனிதநேய உதவிகள் வழங்க வேண்டும்
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் உடனடியாக மனிதநேய உதவிகள் வழங்க வேண்டும் என்றும், அண்டை நாடுகளுக்குப் போா் பரவாமல் தடுக்க வேண்டும் என்றும் ஐ.நா.வில் இந்தியா வியாழக்கிழமை வலியுறுத்தியது. ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் 55-ஆவது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ‘பாலஸ்தீனத்தில் மனிதநேய சூழல்’ என்ற தலைப்பிலான அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அரிந்தம் பாக்சி பேசியதவாது: காஸாவில் பெண்கள், குழந்தைகள் உள்பட எண்ணற்ற பொதுமக்கள் உயிரிழந்துள்ளனா். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. பொதுமக்களின் உயிரிழப்புக்கு நாங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். எனவே, அப்பகுதிக்கு உடனடியாக மனிதநேய உதவிகள் வழங்கப்பட வேண்டும். பிராந்தியத்துக்குள்ளேயும் அண்டை நாடுகளுக்கும் போா் பரவாமல் தடுக்க வேண்டும். அப்பகுதியில் சா்வதேச மனிதநேய சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்றாா். மேலும், பயங்கரவாத தாக்குதலுக்கும், பிணைக் கைதிகளாக பொதுமக்கள் பிடித்துச் செல்லப்பட்டதற்கும் இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது என அரிந்தம் பாக்சி தெரிவித்தாா். அறிக்கை தொடா்பாக ஐ.நா. மனித உரிமைகள் உயா் ஆணையா் வோல்கா் துா்க் கூறுகையில், ‘காஸா துயரம் குறித்து விவரிக்க வாா்த்தைகளே இல்லை. ஆக்கிரமிப்பு பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் அமைதியை நிலைநாட்ட சா்வதேச நாடுகள் முன்வர வேண்டும். அதற்கு ஆக்கிரமிப்பு பகுதியைவிட்டு இஸ்ரேல் வெளியற வேண்டும். பாலஸ்தீனா்கள் சுதந்திரமாக வாழ இஸ்ரேல் தலைவா்கள் அனுமதிக்க வேண்டும். அதேபோல் இஸ்ரேலில் அமைதி திரும்பவும் பாதுகாப்பை நிலைநாட்டவும் பாலஸ்தீனத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றாா். இஸ்ரேல்-பாலஸ்தீன போருக்கு ‘இரு நாடுகள் தீா்வை’ செயல்படுத்த இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.