‘மோடியின் குடும்பம்’: எக்ஸ் தளத்தில் பெயர் மாற்றிய அமித் ஷா, மத்திய அமைச்சர்கள்!
லாலு பிரசாத் யாதவின் விமர்சனத்தை தொடர்ந்து, மோடிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள் எக்ஸ் தளத்தில் பெயர் மாற்றம்.
எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தங்களின் பெயருக்கு பின்னால் ‘மோடியின் குடும்பம்’ என்று சேர்த்துள்ளனர்.
பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், “ நரேந்திர மோடிக்கு குடும்பமே இல்லை, நீங்கள் ஹிந்துகூட இல்லை, ஹிந்து மதத்தினரின் தாய் இறந்தால், மொட்டை அடிக்க வேண்டும். ஆனால், நீங்கள் மொட்டை அடித்தீர்களா? சமூகத்தில் வெறுப்பை மட்டுமே பரப்புகிறீர்கள்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஜோதித்ராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் ‘மோடி கா பரிவார்’(மோடியின் குடும்பம்) என்று தங்களின் எக்ஸ் தளத்தில் பெயருக்கு பின்னால் சேர்த்துள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும், லாலு பிரசாத்தின் விமர்சனத்துக்கு தெலங்கானா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது:
“இந்தியா’ கூட்டணியின் தலைவர்கள், ஊழல், குடும்ப அரசியல் உள்ளிட்டவற்றில் மூழ்கியுள்ளனர். குடும்ப அரசியல் குறித்து நான் கேள்வி கேட்கும் போதெல்லாம், மோடிக்கு குடும்பம் இல்லை எனத் தெரிவிக்கின்றனர்.
என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நாட்டின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மகள்கள், தாய்மார்கள், சகோதரிகள் இன்று மோடி குடும்பத்தில் உள்ளனர். நாட்டின் ஒவ்வொரு ஏழையும் எனது குடும்பம். குடும்பமற்றவர்களுக்கு மோடி சொந்தம். மோடிக்கு அவர்கள் சொந்தம்.” எனத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.