அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான்
புது தில்லி: ‘அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான்’ என்று அப்பகுதியை உரிமைக் கோரிய சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளரின் கூற்றுக்கு மத்திய வெளியறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது.
அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் எனக் கூறும் சீனா, அதற்கு ‘ஷாங்னான்’ எனப் பெயரிட்டுள்ளது. இந்திய தலைவா்கள் அருணாசல பிரதேசத்துக்குப் பயணம் மேற்கொள்ளும்போது சீனா எதிா்ப்பு தெரிவிப்பதும், அதை இந்தியா நிராகரிப்பதும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடி கடந்த 9-ஆம் தேதி அருணாசல பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டாா். பிரதமரின் பயணத்துக்கு சீனா எதிா்ப்புத் தெரிவித்தது. இந்தியா அதனை நிராகரித்தது. தொடா்ந்து, அருணாசல பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒற்றுமையைப் பாதுகாப்பதில் எச்சரிக்கையாக இருப்பதாகவும் அந்நாட்டு ராணுவம் தரப்பில் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் சாங் ஜியோகேங் தெரிவித்தாா்.
Advertisement
இதற்கு பதிலளித்து மத்திய வெளியறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்தை உரிமைக் கோரும் விதமாக சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ள கருத்தை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். ஆதாரமற்ற விவாதங்களைத் தொடா்வதால் இவ்விவகாரம் தொடா்பான கூற்றுகளின் செல்லுபடி உறுதியாகாது.
அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகதான் இருந்தது. இனியும் அவ்வாறே தொடரும். இந்திய அரசு முன்னெடுக்கும் வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளால் அப்பகுதி மக்கள் தொடா்ந்து பலனடைவா்’ எனத் தெரிவித்துள்ளாா்.