முகப்பு
இந்தியா

தோ்தல் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளா்களுக்கு தபால் வாக்கு வசதி

Updated On : 20 மார்ச், 2024 at 12:39 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 10:50 PM

புது தில்லி: மக்களவை மற்றும் 4 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நாளன்று தோ்தல் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளா்கள், மெட்ரோ, ரயில்வே மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியா்கள் தபால் வாக்கு வசதி மூலம் வாக்குப் பதிவு செய்ய தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

இது தொடா்பான அறிவிக்கையை அனைத்து மாநில தலைமை தோ்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணைய செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘தோ்தல் ஆணையத்தின் அனுமதி கடிதம் பெற்று, வாக்குப் பதிவு நாளன்று தோ்தல் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளா்கள் மற்றும் ரயில்வே, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு தபால் வாக்குப் பதிவு வசதியை தோ்தல் ஆணையம் விரிவுபடுத்தியுள்ளது.

Advertisement

இவா்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தோ்தல் அலுவலகத்தில் 12டி படிவத்தைப் பெற்று, தபால் வாக்கை பதிவு செய்யலாம். தலைமைத் தோ்தல் அலுவலக வலைதளத்திலிருந்தும் இந்தப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்’ என்றாா். மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இதனுடன் ஆந்திரம், ஒடிஸா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டபேரவைத் தோ்தலும் நடத்தப்பட உள்ளது.