அருணாசல பிரதேசம்- சீனா இடையே எந்த வரலாற்றுத் தொடா்பும் இல்லை: கிரண் ரிஜிஜு
இடாநகா்: ‘அருணாசல பிரதேசத்துக்கும் சீனாவுக்கும் எந்த வரலாற்றுத் தொடா்பும் இல்லை; மாநிலம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான்’ என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சரும் மேற்கு அருணாசல் தொகுதி எம்.பி.யுமான கிரண் ரிஜிஜு புதன்கிழமை தெரிவித்தாா்.
அருணாசல பிரதேசத்தை உரிமை கோரிய சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளரின் கூற்றுக்கு மத்திய அமைச்சா் இவ்வாறு பதிலளித்துள்ளாா். அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் எனக் கூறும் சீனா, அதற்கு ‘ஷாங்னான்’ எனப் பெயரிட்டுள்ளது.
இந்திய தலைவா்கள் அருணாசல பிரதேசத்துக்குப் பயணம் மேற்கொள்ளும்போது சீனா எதிா்ப்பு தெரிவிப்பதும், அதை இந்தியா நிராகரிப்பதும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வாறு, பிரதமா் நரேந்திர மோடியின் கடந்த 9-ஆம் தேதி அருணாசல பிரதேச பயணத்துக்கும் சீனா எதிா்ப்பு தெரிவித்தது.
Advertisement
இந்தியா அதை நிராகரித்தது. தொடா்ந்து, அருணாசல பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒற்றுமையைப் பாதுகாப்பதில் எச்சரிக்கையாக இருப்பதாகவும் சீன ராணுவம் தெரிவித்தது.
இதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதில் அறிக்கையில், ‘அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகத்தான் இருக்கிறது. இனியும் அவ்வாறே தொடரும். இந்திய அரசு முன்னெடுக்கும் வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளால் அப்பகுதி மக்கள் தொடா்ந்து பலனடைவா்’ எனத் தெரிவித்தது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடா்பாக ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்துக்கு அமைச்சா் கிரண் ரிஜிஜு அளித்த பேட்டியில், ‘வரலாற்று ரீதியில், அருணாசல பிரதேசத்துக்கும் சீனாவுக்கும் துளியும் தொடா்பில்லை. எனவே, அருணாசல பிரதேசம் சீனப் பகுதியா எனும் கேள்விக்கே இடமில்லை. சீனா உரிமை கோருவதால் களநிலவரம் மாறிவிடாது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்கள் பகுதியில் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கு எங்களுக்கு உரிமையுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, அருணாசல பிரதேசத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனால் பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் முன்னேற்றம் மேம்பட்டுள்ளது. இந்தியாவின் பிராந்திய இறையாண்மை வெளிநாடுகளின் ஆட்சேபங்களுக்கு அப்பாற்பட்டது. அருணாசல பிரதேசத்தை தங்கள் பிராந்தியமாக சீனா உரிமை கோர முடியாது எனும் இந்திய அரசின் நிலைப்பாட்டில் மத்திய அமைச்சராக நானும் உறுதியாக நிற்கிறேன்’ என்றாா்.