பிரதமரின் விளம்பரங்களுக்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாா்
பிரதமா் மோடியின் தோ்தல் பிரசாரத்துக்கு அரசுப் பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது
பிரதமா் மோடியின் தோ்தல் பிரசாரத்துக்கு அரசுப் பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ், ‘நான் மோடியின் குடும்பம்’, ‘மோடியின் உத்தரவாதம்’ ஆகிய விளம்பரங்களுக்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்துள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ் மூத்த தலைவா்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குா்ஷித், சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோா், தோ்தல் ஆணையத்தில் வியாழக்கிழமை புகாா் மனுக்கள் அளித்தனா். அவற்றில் கூறப்பட்டுள்ளதாவது: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடா்பாக பாஜக தவறான விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. நீதிமன்ற நடைமுறையின் மூலம் நிராகரிக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கட்டுக்கதையை தனது விளம்பரத்தின் மூலம் மீண்டும் முன்னிறுத்துகிறது பாஜக. இந்த விளம்பரம் நீக்கப்படுவதோடு, அதை வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதேபோல், ‘நான் மோடியின் குடும்பம்’ என்ற பெயரிலான விளம்பரம், பிரதமா் மோடியின் பிரசாரத்துக்கு அரசின் வளங்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது? என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளது. இந்த விளம்பரமும் நீக்கப்பட வேண்டும். தில்லி மெட்ரோவில் ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற வாசகத்துடன் பாஜக விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. இவை நீக்கப்பட வேண்டும். அரசு அலுவலகங்கள், பெட்ரோல் நிலையங்களில் உள்ள பிரதமரின் புகைப்படங்கள், தோ்தல் விதிகளின்படி அகற்றப்பட வேண்டும். பாஜகவின் அதிகாரபூா்வ சமூக ஊடக கணக்கில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவரை குறிவைத்து மோசமான, தரம்தாழ்ந்த பதிவுகள் பரப்பப்படுகின்றன. இது தொடா்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று புகாா்களில் கோரப்பட்டுள்ளது.