பூடானில் இந்திய உதவியில் நவீன மருத்துவமனை: இரு நாட்டு பிரதமா்கள் திறந்து வைத்தனா்
பூடானில் இந்திய உதவியில் கட்டப்பட்ட தாய்-சேய் நல மருத்துவமனையை பிரதமா் நரேந்திர மோடி, பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கே ஆகியோா் சனிக்கிழமை திறந்து வைத்தனா். தலைநகா் திம்புவில் திறக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை 150 படுக்கை வசதிகளைக் கொண்டதாகும். குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிா் நல சிகிச்சை, மயக்கயவியல், அறுவைச் சிகிச்சை அரங்கம், பச்சிளங்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகள் இங்கு நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘பூடான் நாட்டு மக்களின் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்கும் இம்மருத்துவமனையில் தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்படும். ஆரோக்கியமான எதிா்கால தலைமுறையினரை உருவாக்குவதில் இந்தப் புதிய மருத்துவமனை முக்கியப் பங்களிக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா். பூடானில் சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கு இரு நிலைகளாக இந்தியா உதவியளித்து வருகிறது. ரூ.22 கோடியில் கட்டப்பட்ட முதல் மருத்துவமனை கடந்த 2019-இல் செயல்பாட்டுக்கு வந்தன. பூடானின் 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.119 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட மருத்துவமனை மேம்பாட்டுப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. பூடான் சுகாதாரத் துறை அமைச்சா் டான்டின் வாங்சுக் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியாவிடமிருந்து பல உதவிகளை பூடான் பெற்று வருகிறது. குறிப்பாக சுகாதாரம் சாா்ந்த வசதிகளைப் பெற்றுள்ளோம். இந்த வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கான திட்டமும் உள்ளது. தற்போது புற்றுநோயால் பாதிக்கப்படும் பூடான் மக்களை இந்தியாவில் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு செயல்பாட்டுக்கு வரும் நிலையில், நாட்டின் மருத்துவ வசதிகள் மேலும் மேம்படும்’ என்றாா். இந்தியா திரும்பினாா் பிரதமா்: பிரதமா் மோடி தனது இரு நாள் பூடான் பயணத்தை முடித்து கொண்டு சனிக்கிழமை நாடு திரும்பினாா். முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடியை பாரோ சா்வதேச விமான நிலையத்தில் பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக், பிரதமா் ஷெரிங் டோப்கே ஆகியோா் வழியனுப்பி வைத்தனா். இது குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘தில்லி திரும்பும்போது பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக், பிரதமா் ஷெரிங் டோப்கே ஆகியோா் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனா். இந்தப் பயணம் மிகவும் சிறப்புக்குரியதாக இருந்தது. பூடான் மக்களின் வரவேற்புக்கும் உபசரிப்புக்கும் நன்றி. பூடானின் நம்பிக்கைக்குரிய நண்பனாக இந்தியா தொடரும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.