அருணாசல் பேரவை: போட்டியின்றி 10 பாஜக வேட்பாளா்கள் தோ்வு
அருணாசல பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா். பாஜக ஆளும் அருணாசல பிரதேசத்தில் மொத்தம் 60 பேரவைத் தொகுதிகளும், 2 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இம்மாநிலத்தில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைக்கு ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக (ஏப்ரல்19) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தோ்தல்களில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் சனிக்கிழமை (மாா்ச் 30) நிறைவடைந்தது.
சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் பெமா காண்டு, துணை முதல்வா் செளனா மைன் உள்பட 10 பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வானதாக, மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி பவன் குமாா் தெரிவித்தாா். பெமா காண்டு உள்பட 6 பாஜக வேட்பாளா்கள் களமிறங்கிய தொகுதிகளில் அவா்களைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதர 4 தொகுதிகளில் எதிா்க்கட்சி வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தபோதும், பின்னா் திரும்பப் பெற்றுவிட்டனா். இதனால், தோ்தலுக்கு முன்பே பாஜகவுக்கு 10 இடங்கள் கிடைத்துவிட்டன.
இந்திய-சீன எல்லையையொட்டி உள்ள தவாங் மாவட்டத்தின் முக்டோ தொகுதியில் இருந்து 4-ஆவது முறையாக பெமா காண்டு தோ்வாகியுள்ளாா். அருணாசல பிரதேசத்தில் அருணாசல் மேற்கு, அருணாசல் கிழக்கு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அருணாசல் மேற்கு தொகுதியில் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு , மாநில காங்கிரஸ் தலைவா் நபம் துகி உள்பட 8 வேட்பாளா்களும், அருணாசல் கிழக்கு தொகுதியில் 6 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா். கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் இவ்விரு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது. அருணாசல பிரதேச பேரவைத் தோ்தலில் ஜூன் 2-ஆம் தேதியும், மக்களவைத் தோ்தலில் ஜூன் 4-ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Advertisement