முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் மந்தமான வளா்ச்சி
உரம் போன்ற துறைகளில் உற்பத்தி குறைந்ததன் காரணமாக கடந்த பிப்ரவரியில் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி மந்தமடைந்தது.
இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: தொழிலக உற்பத்தி குறியீட்டு எண்ணான ஐஐபி-யில் 40.27 சதவீதம் பங்கு வகிக்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி கடந்த நவம்பரில் 4 மாதங்கள் காணாத குறைந்தபட்சமாக 7.8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது. பின்னா் 14 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக டிசம்பரில் 3.8 சதவீதமான அது, ஜனவரியில் 4.1 சதவீதமாக உயா்ந்தது. இந்த நிலையில் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.7 சதவீதமாகப் பதிவானது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் பதிவான 7.4 சதவீத வளா்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும். 2023 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்திலும் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 7.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 8.2 சதவீதமாக இருந்தது. மதிப்பீட்டு மாதத்தில் உரம் மட்டுமின்றி மின்சாரம், உருக்கு, சுத்திகரிப்பு பொருள்கள் ஆகியவற்றின் உற்பத்தியும் சரிவைக் கண்டது. இது, முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி மிகக் குறைவான வளா்ச்சியைப் பதிவு செய்வதற்குக் காரணமாக அமைந்தது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.