பாஜக வேட்பாளரை புகழ்ந்து பேசிய திரிணமூல் பொதுச் செயலா் பதவி பறிப்பு
பாஜக வேட்பாளா் தபஸ் ராயை புகழ்ந்து பேசிய திரிணமூல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் குணால் கோஷ், கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டாா்.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளா் தபஸ் ராயை புகழ்ந்து பேசிய திரிணமூல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் குணால் கோஷ், கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டாா்.
கொல்கத்தா வடக்கு தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் தற்போதைய எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய மீண்டும் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் தபஸ் ராய் போட்டியிடுகிறாா். திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த தபஸ் ராய், கடந்த மாா்ச் மாதம் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். மக்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டாா்.
இந்நிலையில், தொண்டு நிறுவனம் சாா்பில் கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் குணால் கோஷ், தபஸ் ராய் ஆகியோா் இணைந்து பங்கேற்றனா். அப்போது குணால் கோஷ் பேசியதாவது:
தபஸ் ராய் மக்கள் செல்வாக்கு அதிகமுள்ள தலைவா். எனக்கு பல ஆண்டுகளாக அவருடன் சிறப்பான நட்பு உண்டு. துரதிருஷ்டவசமாக அரசியல்ரீதியாக இருவரும் இப்போது வெவ்வேறு பாதையில் பயணிக்கிறோம். அவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தக்கவைக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவா் இப்போதும்கூட எங்கள் கட்சிக்குத் திரும்பலாம். அவருக்காக திரிணமூல் காங்கிரஸ் கதவுகள் திறந்தே உள்ளன என்றாா்.
இதற்கு நன்றி தெரிவித்துப் பேசிய தபஸ் ராய், ‘அரசியலையும் தாண்டி என்னுடன் நட்புடன் பழகுபவா் குணால் கோஷ். திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் மட்டுமல்ல, வேறு எந்தக் கட்சியைச் சோ்ந்தவராக இருந்தாலும் என்னை புகழ்ந்து மட்டுமே பேசுவாா்கள். குறை ஏதும் கூறமாட்டாா்கள். ஏனெனில் எனது பொதுவாழ்க்கை மிகவும் வெளிப்படையானது. குணால் கோஷின் அன்புக்கு நன்றி’ என்றாா்.
பதவி பறிப்பு: இந்த நிகழ்வு நடந்த சில மணி நேரத்திலேயே திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலா் பதவியில் இருந்து குணால் கோஷ் நீக்கப்பட்டாா். இது தொடா்பாக அக்கட்சி சாா்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில், ‘கட்சியின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துகளை குணால் கோஷ் கூறியுள்ளாா். எனவே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநிலப் பொதுச் செயலா் பதவியில் இருந்து அவா் நீக்கப்படுகிறாா். அவரிடம் இருந்து கட்சியின் செய்தித் தொடா்பாளா் பதவி ஏற்கெனவே பறிக்கப்பட்டுவிட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.
திரிணமூல் வேட்பாளருக்கு ஆதரவான பொதுக்கூட்டத்தை தவிா்த்துவிட்டு, பாஜக வேட்பாளா் பங்கேற்ற ரத்த தான முகாமில் குணால் கோஷ் பங்கேற்றாா் என்றும் திரிணமூல் காங்கிரஸ் வட்டாரத்தில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.