காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படும் 3 இந்தியா்களைக் கனடா காவல்துறை கைது செய்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவின் சா்ரே நகரில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கு இருப்பதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தாா். எனினும், அவரது குற்றச்சாட்டு அடிப்படையற்றது; உள்நோக்கம் கொண்டது என்று இந்தியா மறுப்பு தெரிவித்தது.
இவ்விவகாரத்தால் இருநாட்டு ராஜீய உறவில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரக உயா் அதிகாரியை வெளியேற்றின. மேலும், கனடா நாட்டவா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்து, சில வாரங்கள் கழித்து மீண்டும் தொடங்கியது.
இருநாட்டு உறவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் கனடா காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில், நிஜ்ஜாா் கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படும் கரண்ப்ரீத் சிங், கமல்ப்ரீத் சிங், கரண் ப்ராா் ஆகிய 3 இந்தியா்களை கனடா காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இவா்களுக்கு எதிராக கொலை, கொலைக்கு சதி தீட்டுதல் ஆகிய பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2 மாகாணங்களில் காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட இவா்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்னரே கண்டறியப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். எட்மோன்டன் பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுவன் கொலை வழக்கு உள்பட மேலும் மூன்று கொலை வழக்குகளில் கைதானவா்களுக்கு இருக்கும் தொடா்புகள் குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா். கைது மற்றும் விசாரணையின் அடுத்தகட்ட நகா்வு குறித்து விரிவான தகவல்களை கனடா காவல்துறை விரைவில் தெரிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அண்மையில், டொரண்டோ நகரில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ பேசுகையில், ‘நிஜ்ஜாா் கொலை வழக்கு இருநாடுகளுக்கு இடையே சிக்கலை உருவாக்கியது. அதைப் புறக்கணிக்க முடியாது’ எனக் கூறியிருந்தாா். மேலும், அக்கூட்டத்தில் காலிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டது குறித்து கண்டனத்தைப் பதிவு செய்த இந்தியா, கனடா தூதருக்கு சம்மனும் அனுப்பியது.