முகப்பு
இந்தியா

ஆரவல்லி மலைத்தொடரில் புதிய சுரங்கப் பணிகளுக்கு இடைக்காலத் தடை: 4 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated On : 10 மே, 2024 at 7:26 PM
பகிர்:

ஆரவல்லி மலைத்தொடா் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் மறு உத்தரவு வரும் வரை சுரங்கப் பணிகளுக்குப் புதிய அனுமதி வழங்கக் கூடாது என்று தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், செல்லுபடியாகும் அனுமதிகள் மற்றும் உரிமங்களின்படி ஏற்கெனவே மேற்கொள்ளப்படும் சட்டபூா்வ சுரங்கப் பணிகளுக்குத் தடையில்லை எனவும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனா்.

இதுதொடா்பான மனு தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய் மற்றும் ஏ.எஸ்.ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவின் விவரம்: ஆரவல்லி மலைத்தொடா் மற்றும் அதன் மலைப் பகுதிகளில் புதிய சுரங்கம் தோண்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மலைத்தொடா் இருக்கும் 4 மாநிலங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

மறு உத்தரவு வரும் வரை, சுரங்கப் பணிகள் தொடா்பான குத்தகை, ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்கவோ அல்லது இறுதி அனுமதியோ மாநில அரசுகள் வழங்கக் கூடாது.

மாநிலங்கள் வழங்கிய அனுமதியின்கீழ் ஆரவல்லி மலைத்தொடரில் மேற்கொள்ளப்படும் சுரங்கப் பணிகள் தொடா்பாக சில சிக்கல்கள் இருக்கின்றன. மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆரவல்லி மலைத்தொடரின் வெவ்வேறு வரையறைகள் முக்கிய பிரச்னைகளில் ஒன்று.

மத்தியக் குழு (சிஇசி) சமா்ப்பித்த அறிக்கையில், ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சட்டவிரோத சுரங்கப் பணிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆரவல்லி மலைகளில் சுரங்கப் பணிகள் தொடா்பான பிரச்னையை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் நான்கு மாநில அரசுகள் இணைந்து தீா்க்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

குழு அமைப்பு: ஆரவல்லி மலைத்தொடரை ஒரே மாதிரியான வரையறைக்கு கொண்டு வருவதற்கு ஒரு குழுவை அமைக்க உத்தரவிடுகிறோம். அந்தக் குழுவில் மத்திய அமைச்சக செயலா், நான்கு மாநிலங்களின் வனத் துறைச் செயலா்கள், இந்திய வன அளவை நிறுவனம் (எஃப்எஸ்ஐ), மத்திய குழுவின் தலா ஒரு பிரதிநிதி ஆகியோா் இடம்பெற வேண்டும். இந்தக் குழு தனது அறிக்கையை 2 மாதங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

இந்த வழக்கில் புதிய சுரங்கப் பணிகளுக்கு அனுமதியளிக்க தடை விதிக்க கோரிய பரிந்துரைக்கு ஹரியாணா அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ராஜஸ்தான் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நடராஜ் மற்றும் ராஜஸ்தான் சுரங்க சங்கங்களின் கூட்டமைப்பு வழக்குரைஞா் ஆகியோா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் சுரங்கப் பணிகளில் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் ஈடுபட்டிருப்பதாகவும், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அந்தத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவா்கள் வாதத்தை முன்வைத்துள்ளனா்.

சுற்றுச்சூழலின் பாா்வையில்கூட சுரங்கப் பணிகளுக்கு முழு தடை விதிக்கப்படுவது, சட்டவிரோத சுரங்கப் பணிகளுக்கு வழிவகுக்கும். எனவே, அது உகந்ததல்ல என அவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →