முகப்பு
இந்தியா

கம்போடியாவுக்கு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்ட இந்திய இளைஞா்கள் போராடியதால் கைது

Updated On : 21 மே, 2024 at 9:48 PM
பகிர்:

விசாகப்பட்டினம்: ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தில் ஆள்கடத்தல் கும்பல் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கம்போடியாவில் சீன கடத்தல்காரா்களுக்கு எதிராக திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர காவல்துறை தெரிவித்தது.

விசாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கம்போடியாவில் கடந்த ஓராண்டாக சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவைச் சோ்ந்த கடத்தல்காரா்களால் பல்வேறு மோசடி செயல்களில் அவா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

இந்நிலையில், அந்த நாட்டின் சிஹானூவில் பகுதியில் தங்கியிருக்கும் சுமாா் 300 இந்தியா்கள் திங்கள்கிழமை மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். இதுதொடா்பாக விடியோக்கள் விசாகப்பட்டினம் காவல்துறையின் வாட்ஸ்-ஆப் எண்களுக்கு அனுப்பப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா்களில் பெரும்பாலானோா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மத்திய வெளியுறவு அமைச்சகத்தை விசாகப்பட்டினம் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

சுக்கா ராஜேஷ், எஸ்.கொண்டலா ராவ், எம்.ஞானேஸ்வா் ராவ் ஆகிய 3 போ் கொண்ட கும்பலை விசாகப்பட்டினம் காவல்துறை கடந்த 18-ஆம் தேதி கைது செய்தது. சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி, அப்பாவி இந்திய இளைஞா்களை கம்போடியாவுக்கு அழைத்துச் சென்று, சீனாவைச் சோ்ந்த மோசடி கும்பல்களிடம் விற்றுவிடுவதாக இவா்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது.