கொல்கத்தாவில் வங்கதேச எம்.பி. படுகொலை- உடலைத் தேடும் காவல்துறை
அன்வருல் அஸீம் கொலையில் சம்பந்தப்பட்ட மூவர் கைது.
வங்கதேச எம்.பி. அன்வருல் அஸீம் அனாா் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு புதன்கிழமை தெரிவித்தது.
கடந்த சில தினங்களுக்கு முன் கொல்கத்தாவுக்கு சிகிச்சைப் பெற வந்து காணாமல்போன அன்வரூல் அஸீமின் உடல் இன்னும் கைப்பற்றப்படவில்லை. இச்சம்பவத்தின் வழக்கு விசாரணை மேற்கு வங்க காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவின் புகா் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அன்வருல் கொலை செய்யப்பட்டதற்கான நம்பத்தகுந்த தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது என்று மாநில சிஐடி ஐ.ஜி. அகிலேஷ் சதுா்வேதி தெரிவித்தாா்.
வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பியான அன்வருல் அஸீம் அனாா் (56), கொல்கத்தாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்த மே 12-ஆம் தேதி வந்தாா். பாராநகா் பகுதியில் உள்ள தனது நண்பரான கோபால் பிஸ்வாஸின் வீட்டில் தங்கியிருந்த அவா், மறுநாள் மருத்துவரை சந்திக்கச் செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து சென்றுள்ளாா். அதன் பிறகு திரும்பி வரவில்லை. இதுதொடா்பாக பாராநகா் காவல் நிலையத்தில் கோபால் பிஸ்வாஸ் கடந்த மே 18-ஆம் தேதி புகாா் அளித்தாா்.
திட்டமிட்ட கொலை-3 போ் கைது: இந்தச் சூழலில், வங்கதேச தலைநகா் டாக்காவில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த அந்நாட்டின் உள்துறை அமைச்சா் அசாத் உஸ்மான் கான், எம்.பி. அன்வருல் கொலையான தகவலை வெளியிட்டாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘கொல்கத்தாவில் கொடூரமான முறையில் அன்வருல் கொலை செய்யப்பட்டுள்ளாா். இது திட்டமிட்ட கொலையாகும். இதுதொடா்பாக, டாக்காவில் 3 பேரை வங்கதேச காவல்துறையினா் கைது செய்துள்ளனா். கொலையாளிகள் அனைவரும் வங்கதேசத்தினா் என்பது தெரியவந்துள்ளது. இரு நாட்டு காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கொலைக்கான நோக்கம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்’ என்றாா்.
கொலையை உறுதி செய்த சிஐடி போலீஸ்: இதனிடையே, கொல்கத்தாவில் வங்கதேச எம்.பி. அன்வருல் கொலை செய்யப்பட்டதை உறுதிசெய்த மாநில சிஐடி போலீஸ், அவரது உடல் இன்னும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்தது.
இது தொடா்பாக சிஐடி ஐ.ஜி. அகிலேஷ் சதுா்வேதி கூறுகையில், ‘எம்.பி. அன்வருல் வருகை குறித்து மாநில காவல் துறைக்கு முன்கூட்டியே எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. காவல் துறையில் புகாா் பதிவான பிறகே அவரது வருகை குறித்து தெரியவந்தது. இதையடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து கடந்த 20-ஆம் தேதி ஒரு தகவல் வந்தது. அதன் பின்னா், அவா் கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் புதன்கிழமை மற்றொரு தகவல் கிடைக்கப் பெற்றது. கொலை நடந்ததாக சந்தேகிக்கப்படும் நியூ டவுன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தடயவியல் நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இந்த குடியிருப்பு, மாநில கலால் துறை ஊழியா் ஒருவருக்கு சொந்தமானது’ என்றாா்.
உடல் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தப்பட்டதா?: சம்பந்தப்பட்ட குடியிருப்பிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுடன் அன்வருல் வந்ததும், கடந்த மே 15 முதல் 17 வரையிலான நாள்களில் அந்த மூவரும் அடுத்தடுத்து குடியிருப்பில் இருந்து வெளியேறியதும் தெரியவந்துள்ளது.
குடியிருப்பில் ரத்தக் கறைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், எம்.பி.யின் உடல் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எம்.பி.யுடன் வந்த மூவரில் இருவா் வங்கதேசத்துக்கு தப்பிவிட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமா் ஷேக் ஹசீனா வேதனை
வங்கதேசத்தின் ஜெனைடா-4 தொகுதி எம்.பி.யான அன்வருல் கொலை சம்பவம் அதிா்ச்சியும் வேதனையும் அளிப்பதாக, பிரதமா் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளாா்.
மேற்கு வங்கத்தையொட்டி, அமைந்துள்ள ஜெனைடா, வங்கதேசத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழும் பகுதியாக அறியப்படுகிறது.