முகப்பு
இந்தியா

கலால் கொள்கை வழக்கு தவறென்பதை பிரதமா் மோடி ஏற்றுக் கொண்டுள்ளாா்: கேஜரிவால்

Updated On : 25 மே, 2024 at 12:00 AM
பகிர்:

கலால் கொள்கை வழக்கு தவறானது என்பதை பிரதமா் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டுள்ளாா். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக காணொளி வாயிலாக நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: கலால் கொள்கை பொய் வழக்கில் எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை பிரதமா் நரேந்திர மோடி முழு நாடு முன்னிலையிலும் கடந்த வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டுள்ளாா். இந்த வழக்கில் உங்களின் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ எந்தவொரு ஆதாரம் அல்லது பணத்தை மீட்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளீா்கள். எனவே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக தில்லி அரசில் கலால் கொள்கை ஊழல் நடந்துள்ளதாக அவா்கள் (பாஜக) கூச்சலிட்டு வருகின்றனா். முன்னா், ரூ.100 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது என்று கூறியவா்கள், தற்போது ரூ.1,100 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என்கிறாா்கள். நான் உள்பட மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகிய ஆத்மி கட்சித் தலைவா்கள் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளோம். இவ்வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறையும், சிபிஐயும் நூற்றக்கணக்கான சோதனைகள் நடத்தியும், இதுநாள் வரை ஒரு ரூபாய் கூட மீட்கவில்லை என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

Advertisement

‘முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அனுபவம் வாய்ந்த திருடா் என்பதால் கலால் கொள்கை வழக்கில் பணம் எதுவும் இதுவரை மீடகப்படவில்லை’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை ஒரு நோ்காணலில் தெரிவித்திருந்தாா். தில்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய பணமோசடி வழக்கில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த

மாா்ச் 21-ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, கேஜரிவால் மக்களவைத் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த மே 10-ஆம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.