இந்தியா

தில்லி முங்கேஸ்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 52.9 டிகிரியாக பதிவு மாலையில் பரவலாக மழை

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை இதுவரை இல்லாத அளவாக முங்கேஸ்பூரில் 52.9 டிகிரி செல்சியஸ்

Din

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இதுவரை இல்லாத அளவாக முங்கேஸ்பூரில் 52.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. தில்லியில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. அதே சமயம், நகரத்தில் பெரும்பாலான இடங்களில் மாலையில் லேசான மழை பெய்தது.

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை முக்கிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கியிருந்தது. இந்நிலையில், தில்லியில் புதன்கிழமையும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. முங்கேஸ்பூரில் அதிகபட்ச வெப்பநிலை தலைநகரில் இதுவரை இல்லாத அளவாக 52.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இந்நிலையில், மாலையில் பரவலாக லேசான மழை பெய்தது. இது வெப்பத்தால் தவித்து வந்த மக்களுக்கு நிவாரணமாக அமைந்தது.

தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் வானிலை நிலையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 2.8 டிகிரி உயா்ந்து 29.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 6 டிகிரி உயா்ந்து 46.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 43 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 30 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முங்கேஸ்பூரில் 52.9 டிகிரி: இதே போன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை உயா்ந்தே பதிவாகியிருந்தது. இதன்படி, ஜாஃபா்பூரில் 48.7 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 52.9 டிகிரி, நஜஃப்கரில் 49.1 டிகிரி, ஆயாநகரில் 46.8 டிகிரி, லோதி ரோடில் 46.2 டிகிரி, நரேலாவில் 48.4 டிகிரி, பாலத்தில் 47 டிகிரி, ரிட்ஜில் 47.3 டிகிரி, பீதம்புராவில் 48,9 டிகிரி, பிரகதிமைதானில் 45.2 டிகிரி, பூசாவில் 49 டிகிரி, ராஜ்காட்டில் 45.2 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 45.2 டிகிரி செல்சிஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. இதன்படி, ஐடிஓ, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், பட்பா்கஞ்ச், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ’மோசம்’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், சாந்தினி சௌக், ஆனந்த் விஹாா் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கு மேலே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (மே 30) அன்று புழுதிக் காற்றும், இடிமின்னலும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான கொலைகார காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

தமிழகத்தில் நவ.6 வரை மிதமான மழை!

எண்ணூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 4 பெண்கள் உடல்கள்!

நவ. 2-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

சா்தாா் வல்லப பாய் பட்டேலின் மறு உருவம் அமித் ஷா: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT