மகாராஷ்டிர மாநிலம் புணேவில் 17 வயது சிறார் மதுபோதையில் காரை ஓட்டி இரண்டு பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் குறித்து மீம்ஸ்களும் விடியோக்களும் பரவி வருகின்றன.
இந்த நிலையில்தான், கஜோதர் சிங் கூல் என்ற சமூக ஊடக பிரபலம், அந்த 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் வழங்க விதித்த நிபந்தனையை விமரிசிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடியோ பகிர்ந்துள்ளார்.
அந்த விடியோவில், அவர் தனது காரை வேகமாக இயக்குவது போலவும், அப்போது கையில், ஒரு நோட்டுப் புத்தகத்தில் 300 வார்த்தைகளில் ஒரு கட்டுரை எழுதி தயாராக வைத்திருப்பதாகவும் அவர் காண்பிக்கிறார்.
பிறகு பயங்கரமாக சிரித்தபடி, சகோதரர்களே, இப்போது நான் எந்த வேகத்திலும் வாகனத்தை இயக்கலாம், ஏற்கனவே 300 வார்த்தையில் ஒரு கட்டுரை எழுதி வைத்திருக்கிறேன் என்று காண்பித்துக்கொண்டே தனது வாகனத்தில் வேகமாக பயணிப்பது போன்று விடியோ பதிவிட்டுள்ளார்.
இந்த விடியோவை இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து விருப்பக் குறியை பதிவிட்டுள்ளனர். பலரும் இதற்கு பல்வேறு கருத்துகளை பதிவிட்டிருந்தாலும், ஒரு சிலர், சகோதரா இந்த விதிமுறை பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற கருத்தை அதிகம் பகிர்ந்துள்ளனர்.
ஒருசிலர், அதற்கு உன் தந்தை தொழிலதிபராக இருக்க வேண்டும் என்றும் கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.