வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை பாஜக அரசியலாக்குவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஜூலை மாதத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். குடியிருப்பாளர்கள் பலர் இடம்பெயர்ந்தனர். அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மக்களவையில் தேர்தலில் இரண்டு தொகுதியில் வெற்றிபெற்ற ராகுல் ரே பரேலி தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டார். இதன்காரணமாக வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வயநாட்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முதன்முறையாகக் களம் காண்கிறார். இதனிடையே பாஜகவை தொடர்ந்து விமர்சனமும் செய்து வருகிறார்.
இதனிடையே பிரியங்கா தனது இரண்டாவது கட்ட பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கினார், தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் மலைத்தொகுதியில் பேரணியில் ஈடுபட்டுள்ளார். சுல்தான் பத்தேசி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கெனிச்சிரா என்ற இடத்தில் இரண்டாவது நாளாக இன்று பேரணியைத் தொடங்கியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது,
“மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்திய ஒரு பேரழிவைக் கூட பாஜக அரசியலாக்கியது". நாட்டில் நீங்கள் விரும்பும் அரசியலைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய இடத்தில் நாங்கள் நிற்கிறோம். நாடு முழுவதும் பரவிவரும் பாஜகவின் அரசியல் வெறுப்பு, கோபம், பிரிவினை மற்றும் அழிவு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.
மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னைகள் கவனிக்கப்படாமல் இருப்பதாகவும், அவர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், வேலையில்லாத் திண்டாட்டம் எல்லா நேரத்திலும் உச்சத்தில் இருப்பதாகவும், விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் பேசினார்.
இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் அரசியல் கவனம் செலுத்தவில்லை. பாஜகவின் அரசியல் உங்கள் பிரச்னைகளில் இருந்து திசை திருப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது, அதன் ஒரே நோக்கம் அதிகாரத்தில் இருக்க வேண்டும், அது எவ்வளவு விலையாக இருந்தாலும் சரி. நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான நிதியை விநியோகிப்பதிலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு 'தோல்வியடைந்துவிட்டது'.
உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை எனக்கு அளித்தால், உங்களுக்காக மற்றவர்களை விட என்னால் கடினமாக உழைக்க முடியும் என்பதை நான் காட்டுவேன். உங்கள் பிரச்னைகளை எங்கும் குரல் கொடுப்பேன். உங்களுக்காகப் போராடி மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பேன். உங்கள் தேவைகளுக்குப் பின்வாங்காத ஒரு கடினமான போராளியாக உங்கள் பக்கத்தில் இருப்பேன் என்று அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.