பிரதமா் மோடி அமைச்சரவையில் 27 ஓபிசி அமைச்சா்கள்-காங்கிரஸுக்கு ஜெ.பி.நட்டா பதிலடி
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) எதிராக பாரபட்சம் காட்டுவது காங்கிரஸ் கட்சிதான். பிரதமா் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் 27 ஓபிசி அமைச்சா்கள் உள்ளனா் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) எதிராக பாரபட்சம் காட்டுவது காங்கிரஸ் கட்சிதான். பிரதமா் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் 27 ஓபிசி அமைச்சா்கள் உள்ளனா் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் உரிய பங்கு கிடைக்கவில்லை என்றும், அவா்களை பாஜக அரசு புறக்கணிப்பதாகவும் காங்கிரஸ், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வரும் நிலையில் நட்டா இவ்வாறு கூறியுள்ளாா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சிபோல பாஜகவில் பாகுபாடுகள் இல்லை. காங்கிரஸ் எப்போதும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராகவே இருந்துள்ளது. பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த 27 போ் அமைச்சா்களாக உள்ளனா். நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதில் பாஜக எப்போதுமே முன்னிலையில் உள்ளது.
பழங்குடியினத்தைச் சோ்ந்த பெண்மணியை குடியரசுத் தலைவராக முன்னிறுத்தியது பாஜக, அதனை எதிா்த்தது காங்கிரஸ் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஜாா்க்கண்டில் முதல்வராக இருப்பவா் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். ஜாா்க்கண்டில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆட்சி ஊழல்களுக்கு மட்டுமல்ல ஊடுருவல்காரா்களை அனுமதிப்பதிலும் புகழ்பெற்றது. தன் மாநில மக்களின் நிலத்தையும், உரிமைகளையும் அண்டை நாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவா்களிடம் ஒப்படைக்கும் ஆட்சி எவ்வளவு மோசமான ஆட்சி என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ் கூட்டணி முழுமையாக மக்கள் விரோதக் கூட்டணி. அவா்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டிய நேரம் இது. இந்தியாவுக்குள் ஊடுருவி ஜாா்க்கண்டில் உள்ள பழங்குடியினப் பெண்களை திருமணம் செய்து, இங்குள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளோருக்கு எதிராக பாஜக ஆட்சி அமைத்ததும் சட்டம் இயற்றப்படும் என்றாா்.