ரத்தன் டாடா - கரோலின் எம்மன்ஸ் Photos: Harper Collins, From the book - Ratan Tata : A life by Thomas Mathew.
இந்தியா

ரத்தன் டாடாவின் முறிந்துபோன முதல் காதல்!

மறைந்த ரத்தன் டாடாவின் முதல் காதல் மலர்ந்து மணம் வீசாமல் போனது பற்றி பேசுகின்றன அவரது சுயசரிதை புத்தகமும் ஹாலிவுட் படமும்.

இணையதளச் செய்திப் பிரிவு

ரத்தன் டாடாவைப் பற்றி பேசும்போது, அவரது முதல் காதலும் முக்கியத்துவம் பெறுகிறது. காரணம்.. அது திருமணத்தில் முடியாததே.

மறைந்த ரத்தன் டாடா இளமையான துடிப்பான இளைஞராக இருந்தபோது, அமெரிக்காவின் புகழ்பெற்ற கட்டடக் கலைஞரின் மகளுடன் ஏற்பட்ட மிக அழகிய காதல், எல்லா வகையிலும் சிறப்பாக அமைந்திருந்தும் கூட விதிவசத்தால், நிறைவேறாமல் போனது. ஆனாலும் இருவருக்குள்ளும் இருந்த அந்த ஆழமான அன்பு மட்டும் ரத்தன் டாடா இருக்கும் வரை நீடித்தது.

டாடா குழுமத்தின் நிர்வாகியாக இருந்து மறைந்த ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம் பல ஆண்டுகளுக்குப் பின்னும் பார்ப்பவர்களின் மனதை கனக்கச் செய்கிறது. இதற்கிடையே தாமஸ் மேத்யூ எழுதிய ரத்தன் டாடா : வாழ்க்கை எனும் சுயசரிதை புத்தகம், ரத்தன் டாடாவின் காதல் - பிரிவு - நட்பாக தொடர்ந்த கதையை வாசகர்களுக்கு அணுஅணுவாக எடுத்துரைக்கிறது.

தொழிலதிபரும், மாமனிதர் என்று போற்றப்பட்டவரும், மனிதன் என்பவர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டி, முன்னோடியாக இருந்தவருமான ரத்தன் டாடா, கடந்த மாதம் உடல்நலக் குறைவால் மறைந்தார்.

அவரது மனிதநேயத்தால், அனைவராலும் புகழப்பட்டவர் என்பதோடு மட்டுமல்லாமல், இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தி, டாடா குழும நிறுவனங்களை உலகளவில் கொண்டுச்சென்று மகத்தான சாதனைகளைப் படைத்தாலும் எந்த இடத்திலும் அவரது பணிவு சற்றும் குறையாமல் நடந்துகொண்ட விதமே எளிய மக்களுக்கும் அவர் மீது அன்பையும் ஈர்ப்பை ஏற்படுத்திவிட்டிருந்தது. இந்த நிலையில்தான், அவர் திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்து மறைந்தது குறித்து அவரைப் பற்றி பெரிதாகத் தெரியாதவர்களும் பேசிப் பேசி மாள்கிறார்கள்.

தி டார்ஜீலிங் லிமிடட்

அவர் திருமணம்தான் செய்துகொள்ளவில்லையே தவிர, அவரது வாழ்விலும் காதல் மலர்ந்துள்ளது. ரத்தன் டாடாவின் அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாறு திரைப்படம், புகழ்பெற்ற அமெரிக்க கட்டடக் கலைஞரின் மகளான கரோலின் எம்மன்ஸுடனான அவரது ஆழமான காதலை வெளிப்படுத்தியிருக்கிறது. 1960ஆம் ஆண்டுகளில் உருவான ஹாலிவுட் படம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் ரத்தன் டாடா-கரோலினுக்கும் இடையே இருந்த பிணைப்பை நம் கண் முன் கொண்டு வருகிறது என்றால் அது மிகையில்லை.

ஹாலிவுட் இயக்குநர் வெஸ் ஆண்டர்சன் இயக்கிய திரைப்படம்தான் தி டார்ஜிலிங் லிமிடெட். அந்தப் படமும், ரத்தன் டாடாவின் சுயசரிதைப் புத்தகமும், அவரது வாழ்க்கையின் பல அத்தியாயங்களை எடுத்துரைத்தாலும், இப்போது அதிலிருந்து நாம் கொண்டுவந்திருப்பது அந்த அழியாத காதலைத்தான்.

இந்தியாவிலிருந்து சென்ற மிகத் துடிப்பான இளைஞரான ரத்தன் டாடாவுக்கு கரோலின் எம்மன்ஸை அறிமுகப்படுத்தி வைத்தது, அவரது தந்தை பிரெடரிக் எர்ல் எம்மோன்ஸின் தொழில் கூட்டாளியும், கட்டட வடிவமைப்பாளருமான குவின்ஸி ஜோன்ஸ். எம்மோன்ஸ் - ஜோன்ஸ் இணைந்து உருவாக்கிய கட்டடக் கலை நிறுவனம், மிகப்பெரிய புகழின் உச்சத்தை அடைந்திருந்தது.

முதல் பார்வையிலேயே காதல் வருமா? என்று காதலித்துப் பார்க்காதவர்கள் கேட்கலாம். ஆனால் வந்தது.. ரத்தன் டாடாவுக்கு முதல் முறை கரோலினைப் பார்த்ததுமே அவர் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது என்கிறார் ஜோன்ஸ். வழக்கமான காதல் கதை போலல்லாமல் கரோலினின் பெற்றோருக்கும், ரத்தன் டாடாவை மிகவும் பிடித்திருந்தது. (யாருக்குத்தான் பிடிக்காது) ஆனால், அனைத்தும் நன்றாக அமைந்தும்கூட, இந்த உறவு நீண்டநாள்களுக்கு நீடிக்கவில்லை என்கிறார் கோடீஸ்வர தொழிலதிபரான ரத்தன் டாடாவின் புதிய சுயசரிதை எழுத்தாளர் தாமஸ் மேத்யூ.

கரோலின் தந்தைக்கும் ரத்தன் டாடாவுக்கும் இருந்த ஒரே பிணைப்பு இருவரும் கட்டடக் கலைஞர்கள் என்பது மட்டுமே. கடந்த 1962ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கட்டடக் கலையில் ஐந்தாண்டு பட்டப்படிப்பை முடித்து, கார்நெல் பல்கலையிலிருந்து பிஎஸ்சி பட்டத்தை பெற்றார் ரத்தன் டாடா. கரோலின் தந்தையின் தொழில் நண்பரான ஜோன்ஸ்தான், ரத்தன் டாடாவின் ஆய்வறிக்கையை மதிப்பிட்டவர், அதன் தொடர்ச்சியாக, ரத்தன் டாடா ஜோன்ஸுக்கு கடிதம் எழுதுகிறார், பிறகு, அவரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசும்போது விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், இந்தியாவின் இளமையான துடிப்பான இளைஞர் ஒருவர் எண்ணற்றக் கனவுகளுடன் லாஸ் ஏஞ்செல்ஸ் நோக்கிப் பறக்கிறார், அங்கு அவர்களது நிறுவனத்தில் வேலையில் இணைகிறார்.

சுயசரிதை புத்தகம்

மகளுக்கு முன்பே, கரோலின் தந்தைக்கு ரத்தன் டாடா மீது அன்பு பெருகுகிறது என்கிறது ரத்தன் டாடா பற்றிய சுயசரிதை புத்தகம். மிகவும் துடிப்பான அதே வேளையில், பணிவுடன் நடந்துகொள்ளும் இளம் கட்டடக் கலைஞர் ரத்தன் டாடாவை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். கரோலின் தாய்க்கும் கூட டாடாவை ரொம்பப் பிடித்திருந்தது. கரோலினை ரத்தன் டாடாவுக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணமும் இருந்துள்ளது. ஆனால், அனைத்தும் ஒரே நாளில் இல்லாமல் போனது. அந்த நாள்... 1962ஆம் ஆண்டு ஜூலை மாதம்.. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது பாட்டியை உடன் இருந்து பார்த்துக்கொள்வதற்காக ரத்தன் டாடா இந்தியா திரும்பியபோது. காதலை விட தன்னை வளர்த்த பாட்டியை கவனித்துக்கொள்வதே முக்கியம் என அந்த துடிப்பான இளைஞருக்கு அன்று தோன்றியது.

இதனாலென்ன.. கரோலினும் ரத்தன் டாடாவுடன் இந்தியா வருவதற்கான யோசனைகள் எழுந்தன. ஆனால், அவர்கள் சேரவே கூடாது என்று விதி இருந்ததால், 1962ஆம் ஆண்டு அக். 20 ஆம் தேதி இந்தியா - சீனா இடையே போர் தொடங்கியது.

இந்தியா - சீனா இடையே தாக்குதல் தொடங்கியது, இது அமெரிக்காவில் இருந்தவர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியது. கரோலினை இந்தியாவுக்கு அனுப்ப அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால், இருவரும் பிரிய நேர்ந்ததாக ஒரு சோகக் கதையை கனத்த இதயத்துடன் சொல்கிறது புத்தகம்.

ரத்தன் டாடாவுடனான காதல் நீடிக்காததும், அதற்கு போர் ஒரு காரணமாக மாறியதும் கரோலினுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் காலம் அப்படியே விட்டுவிடவில்லை, கரோலின் விமான ஓட்டுநரும் கட்டடக் கலைஞருமான ஓவென் ஜோன்ஸை மணந்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். தனது திருமணம் குறித்து கரோலின் ஒரு முறை கூறியதாக அந்த புத்தகம் பதிவு செய்திருக்கிறது. அதில், ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நான் மணந்துகொண்டிருப்பவரும், ரத்தன் டாடாவைப் போலவே இருக்கிறார் என்று கூறியதாகத் தெரிவிக்கிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஓவென் உயிரிழந்த நிலையில், 2007ஆம் ஆண்டு தி டார்ஜிலிங் லிமிடட் படத்தை தனது நண்பர்களுடன் சேர்ந்து கரோலின் பார்த்துள்ளார். இப்படத்தில் ஓவென் வில்சன் மற்றும் ஆட்ரியன் பிராடி ஆகியோர் ரத்தன் டாடா - கரோலின் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம், பிரிந்துபோன மூன்று சகோதரர்கள் மேற்கொள்ளும் இந்திய பயணத்தின் போது சந்திக்கும் அனுபவங்களை உணர்வுப்பூர்வமாக சொல்வதாக அமைந்திருக்கும். படத்தின் நிறைவாக, அந்த மூன்று பேரில் ஒருவர் கரோலினிடம் கேட்கிறார், எப்போதாவது நீங்கள் இந்தியா செல்ல வேண்டும் என்று விரும்பினீர்களா? என்று. இதன் மூலம், பழையக் காதல் நினைவுகள் கொப்பளிக்கத் தொடங்குகிறது.. கதை விரிகிறது.

கரோலின் அளித்த பதிலில், இந்தியாவில் இருக்கும் ஒருவரை எனக்குத் தெரியும், அவரை கூகுளில் தேட விரும்பினேன். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது, ரத்தன் தற்போது டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளையின் நிர்வாகியாக இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன். அப்போது கிடைத்த ஒரு மின்னஞ்சல் முகவரி மூலம், கரோலின் ரத்தன் டாடாவுக்கு தான் இந்தியா வர திட்டமிட்டிருப்பதாக ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். காதலித்தபோது இந்தியா வர முடியாத கரோலின், ரத்தன் டாடாவை சந்திக்க இப்போது இந்தியா வருகிறார். கரோலின் பயணத் திட்டம் உண்மையிலேயே மிகச் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கிறது. பிறகு பார்க்க வந்தது ரத்தன் டாடாவை அல்லவா.. அப்போது கரோலின் இந்தியாவில் ஐந்து வாரங்கள் தங்கியிருந்தாராம்.

ரத்தனும் கரோலினும் தில்லியில் சந்திக்கிறார்கள். இருவரும் சில நாள்கள் ஒன்றாக பொழுதைக் கழிக்கிறார்கள். அது முதல், கரோலின் இந்தியாவுக்கு அவ்வப்போது வருகை தந்திருக்கிறார். 2018ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி ரத்தன் டாடாவின் 80வது பிறந்த நாளைக் கொண்டாடும்போதும் கரோலின் மும்பை வந்திருந்தார். அதன்பிறகும் அவர் 2021ஆம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். அது மட்டுமா? ரத்தன் டாடா எப்போதெல்லாம் அமெரிக்கா செல்கிறாரோ, அப்போதெல்லாம் கரோலினை வெளியே அழைத்துச் சென்று உணவருந்தி வருவார்கள் என்று புத்தகத்தில் எழுதியிருக்கிறார் மேத்யூ.

ரத்தன் டாடாவின் சுயசரிதைப் புத்தகத்தை எழுதிய மேத்யூ, ரத்தன் டாடாவுடன் பல மணி நேரங்கள் நேர்காணல் நடத்தி பல முக்கிய குறிப்புகளை எடுத்துக்கொண்டதோடு, அவரது நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறவுகள், உதவியாளர்கள் என பலரிடமும் பல மணி நேரங்கள் பேசி பல தகவல்களை திரட்டிய பிறகே இந்த புத்தகம் வெளியானது.

அவர் பல்வேறு நேர்காணல்களில், தனது வாழ்க்கையில் காதல் சில முறை நெருங்கி வந்து, ஏனோ பல காரணங்களால் திருமணத்தில் முடியாமல் போனதையும், 63ஆவது வயதிலும், தனக்கு ஏற்ற ஒருவரை சந்தித்தால் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியிருந்ததும், சில முறை, வீடு திரும்பும்போது தனிமையை உணர்ந்ததாகக் கூறியிருந்ததும் பலரும் மனதை உலுக்குவதாக உள்ளது. எத்தனை பெரிய சாதனை மனிதராக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் எத்தனை சோகங்களை சுமந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போதுதான் சேர்ந்த காதலைவிடவும் சேராத காதல் தரும் வலியும் அனுபவமும் எப்போதும் போகாது என்பதை உணர்த்துகிறது.

திரைப்படத்தில்

அனைவரும் கொண்டாடிய நாயகன் ரத்தன் டாடா, கடந்த அக்.9ஆம் தேதி உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் காலமானார். சாமானிய மக்களுக்கும் அவரது மறைவு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏராளமான மக்கள் ரத்தன் டாடாவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவருக்கு அரசின் முழு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

அவர் மறைந்தாலும் அவரது புகழ் மறையாது என்பதை யாரும் சொல்ல வேண்டியதேயில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

SCROLL FOR NEXT