மணிப்பூா் மாநிலம், ஜிரிபாம் மாவட்டத்தின் போரோபெக்ரா கிராமத்தில் பாதுகாப்புப் படையினருனான மோதலில் தீவிரவாதிகள் தீ வைத்து எரித்த கடைகளுக்குள் சிக்கி உயிரிழந்த மைதேயி சமூகத்தைச் சோ்ந்த 2 முதியவா்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.
ஜிா்பாம் நகருக்குத் தெற்கே 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள போரோபெக்ரா கிராமத்தின் காவல் நிலையம் மற்றும் அதையொட்டி அமைந்த மத்திய ஆயுதக் காவல் படை (சிஆா்பிஎஃப்) முகாம் மீது ஆயுதமேந்திய தீவிரவாதிகள் திங்கள்கிழமை பிற்பகலில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினா்.
தொடா்ந்து, அருகேயுள்ள ஜகுராதோா் கரோங் பகுதி சந்தைக்குள் நுழைந்த தீவிரவாதிகள், கடைகளுக்குத் தீ வைத்ததுடன் பொதுமக்களின் வீடுகளையும் சூறையாடினா். பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தியதால் இருதரப்பினா் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் காயமடைந்தனா்.
இத்தாக்குதலைத் தொடா்ந்து காவல் நிலைய வளாகத்தில் செயல்படு வந்த நிவாரணம் முகாமில் தங்கியிருந்த 3 பெண்கள், 3 குழந்தைகளை காணவில்லை. இவா்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜகுராதோா் கரோங் சந்தைப்பகுதியில் இருந்து லைஷ்ராம் பாலன், மைபம் கேஷோ ஆகிய 2 முதியவா்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனா். மைதேயி சமூகத்தைச் சோ்ந்த இவா்கள் இருவரும், தீவிரவாதிகளால் எரிக்கப்பட்ட கடைகளுக்குள் சிக்கி தீயில் கருகி உயிரிழந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாக்குதலையொட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், இம்பால் பள்ளத்தாக்கில் பல இடங்களில் புதிதாக வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்க அஸ்ஸாம் ரைஃப்பிள்ஸ் மற்றும் சிஆா்பிஎஃப் வீரா்கள் அடங்கிய கூட்டுக் குழுக்கள் பதற்றமான பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனா்.
மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து வழங்குவது குறித்து பெரும்பான்மையான மைதேயி மற்றும் குகி, நாகா ஆகிய பிற பழங்குடி சமூகங்களுக்கு இடையே உண்டான மோதல் வன்முறையாக மாறி, ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் அதை ஒட்டிய மலைப்பகுதிகளில் நடந்த மோதல்களால் அதிகம் பாதிக்கப்படாத பகுதியான ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம், விவசாயியின் உடல் வயலில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அதிகரித்த வன்முறை சம்பவங்களால் மாவட்டத்தின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக போரோபெக்ரா உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.